திமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அதற்கான அறிவிப்பு வெளியாகுமா என்ற ஏக்கத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளனர். கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என பொதுநல அமைப்புகளும், பொதுமக்களுக்கும் கால் நூற்றாண்டு காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆட்சி காலத்தில் புதிதாக சில மாவட்டங்கள் உருவாக்கப்பட்டபோதே, கும்பகோணம் அந்த பட்டியலில் இடம்பெறும் எதிர்பாக்கப்பட்ட நிலையில் ஏமாற்றம்தான் கிடைத்தது.

 

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என தொகுதிகள் தோறும் மக்கள் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட திருக்கடையூரில் நடைபெற்ற குறைகேட்கும் நிகழ்ச்சியில் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என எம்பி செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை க.அன்பழகன், கோவி.செழியன் ஆகியோர் ஒரு சேர கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்ததும் புதிய மாவட்டம் அறிவிக்கப்படும் என்றார். பின்னர் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரத்தநாட்டில் நடைபெற்ற வாக்கு சேகரிக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என வாக்குறுதியை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று உள்ளதை அடுத்து கும்பகோணம் புதிய மாவட்டத்தை அறிவிக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு அப்பகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது.



 

கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய தாலுக்காக்களை உள்ளடங்கி புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என பல கட்ட போராட்டங்களை நாங்கள் நடத்தி, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். புதிய மாவட்டத்துக்கான அனைத்து தகுதிகளும் இருப்பதால், இனியும் கால தாமதம் செய்யாமல் அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விரைவில் அறிவிப்பை வெளியிட வேண்டும் என இத்தொகுதிகளில் உள்ள திமுக எம்எல்ஏக்களிடம் மனுக்களை கொடுத்து வலியுறுத்தியுள்ளோம்.மேலும் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக அனைத்து தரப்பு மக்களும் எழுப்பி வருகின்றனர். மாவட்ட தலைநகரங்களில் உள்ள அனைத்து அலுவலகங்களும் இங்கு செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மட்டும் தான் கட்ட வேண்டும். புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டால் இப்பகுதி மேலும் வளர்ச்சி அடையும்.

 

கடந்த காலங்களில் சில அரசியல் நிலைப்பாட்டால் புதிய மாவட்டம் அறிவிக்காமல் போனது, தற்போது அதற்கு ஏற்ற சூழல் வந்துள்ளது. மேலும் தேர்தல் பிரச்சார வாக்குறுதியில் முதன்மையானது கும்பகோணம் மாவட்டம் தான், எனவே முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற திட்டத்தில் குறைகளை 100 நாட்களுக்குள் தீர்க்கப்படுவது போல், எங்களது கோரிக்கைகளையும் தீர்க்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு என்கின்றனர் கும்பகோணம் பகுதி மக்கள்.