தமிழ்நாட்டின் கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகளவு வருமானத்தை பெற்றுத்தரக்கூடிய நகரமாகும். வர்த்தக நிறுவனங்களான மொத்தம், சில்லரை வணிகளும் அதிகஅளவில் நடைபெறக்கூடிய நகரமாகும். தமிழகத்தில் உள்ள 8 பேருந்து கோட்டங்களில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டமும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் காவிரி டெல்டா மாவட்டத்திற்கான தலைமை அலுவலகும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும், மாவட்ட தலைமையகத்திற்கு தேவையான பதிவாளர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், கல்வி மாவட்டமும் தற்போது இயங்கி வருகிறது. அதே போல் தஞ்சை மாவட்டத்திலேயே வர்த்தக கேந்திரமாக கும்பகோணம் விளங்குவதால் தஞ்சைக்கு முன்னரே கும்பகோணத்தில் வருமான வரித்துறை அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. காவிரி- அரசலாறுகளுக்கு இடையே இந்த ஊர் அமைந்துள்ளது. கும்பகோணம் 1866 ஆம் ஆண்டு முதல் நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. 4.96 சதுர மைல் பரப்பளவு கொண்ட இந்நகரில் 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி 1,40,113 பேர் 45 வார்டுகளில் வசித்து வருகின்றனர். 1866 ஆம் ஆண்டு மூன்றாம் நிலையாகவும், 1949 ஆம் ஆண்டில் இருந்து முதல் நிலையாகவும், 1974 ஆண்டில் இருந்து தேர்வு நிலை நகராட்சியாகவும், 1998 ஆம் ஆண்டு முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது.
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு மேல்நிலைப் பள்ளி, 4 நடுநிலைப் பள்ளிகளும் 13 தொடக்கப் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் மூன்று மருத்துவமனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. 2009 ஆம் ஆண்டில் இருந்து புதை சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கடந்த 2013 ஆம் ஆண்டே நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. தஞ்சாவூர் நகராட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் தற்போது நகராட்சியாக இருந்த கும்பகோணமும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளதை அடுத்து ஓரே மாவட்டத்தில் இரு மாநகராட்சிகளாக இடம்பெற்றது. இதன் மூலம் கும்பகோணம் விரைவில் தனிமாவட்டமாக உருவாகும் என கும்பகோணம் பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் போராடி வந்த நிலையில், தற்போது முதற்கட்டமாக மாநகராட்சியாக கடந்த 2021 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு கும்பகோணத்தை மாநகராட்சியாக அறிவித்தற்கு ஆணை வெளியிட்டது. இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோயில் அருகில் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், மாநகர செயலாளர் தமிழழகன், திமுகவினர் மற்றும் பொது மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.