தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒருங்கிணைந்த கோா்டில் சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது கேண்டீன், கார் பார்க்கிங் வசதி செய்து தர கோரி வக்கீல்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.


கும்பகோணம் ஒருங்கிணைந்த கோர்ட்


தஞ்சை மாவட்டம் கும்பகோணம்  அரசு தலைமை ஆஸ்பத்திரி அருகே ஒருங்கிணைந்த கோர்ட் இயங்கி வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு இந்த கோர்ட் வளாகத்தில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம், நீதித்துறை நடுவர் மன்றம், முதன்மை அமர்வு நீதி மன்றம், கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், 1-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், 2-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட கோர்ட்கள் இயங்கி வருகிறது.


வசதிகள் குறித்து நீதிபதி ஆய்வு


இந்நிலையில் இந்த ஒருங்கிணைந்த கோர்ட்டில் கேண்டின் வசதி, கார் பார்க்கிங், அனைத்து கோர்ட்களிலும் குளிர்சாதன வசதி ஆகியவை அமைத்து தரவேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக கும்பகோணம் வக்கீல்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மேற்கண்ட வசதிகளை ஏற்படுத்தி தரும் வகையில் சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் கும்பகோணம் கோர்ட்டில் ஆய்வு செய்தார்.




வக்கீல்கள் சங்கத்தினர் மனு


அப்போது கோர்ட் மற்றும் நீதிபதிகள், வக்கீல்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வக்கீல்கள் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமையில் செயலாளர் செந்தில்நாதன், துணைத்தலைவர் இளங்கோவன் மற்றும் வக்கீல்கள் மனுவை அளித்தனர். தொடர்ந்து சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார், கேண்டின் வசதி, கார் பார்க்கிங் வசதிகள் குறித்து உரிய அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


ஆய்வின் போது தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி ஜெஸிந்தா மார்ட்டின், கூடுதல் மாவட்ட நீதிபதி ராதிகா, குற்றவியல் நீதிதுறை நீதிபதி சண்முகபிரியா, நீதிபதிகள், கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.