தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் அண்ணா சிலை அருகே மாடி வீட்டில் வசித்து வருபவர்கள் விஜய் ஆனந்த் – கீர்த்திகா. இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. குழந்தையின் பெயர் ஹரிபிரியன். குழந்தைகள் என்றால் எப்போதும், சேட்டைகளும், விளையாட்டுகளும் தானே டிரேட் மார்க். அந்த வகையில் குழந்தை ஹரிப்பிரியன் மாடியில் உள்ள தாழ்வார பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான்.


வெளியில் செல்லும் வாகனங்களின் ஓசையில் ஈர்க்கப்பட்ட குழந்தை மெதுவாக பால்கனி கைப்பிடியாக அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கிரிலை பிடித்து எழுந்து நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவன் மெதுவாக அந்த கிரில் கம்பிகளுக்கு இடையில் தலையை விட்டுள்ளான். எப்படி அந்த கிரில் கம்பிகளுக்கு இடையில் குழந்தையின் தலை நுழைந்ததோ தெரியவில்லை. சற்று நேரம் வரை வேடிக்கை பார்த்த குழந்தை மீண்டும் தலையை வெளியில் எடுக்க முயற்சி செய்ய முடியவில்லை. அவ்வளவுதான் தனக்கு என்னவே ஆகிடுச்சு என்ற நினைப்பில் குழந்தை சத்தமாக அழ ஆரம்பித்துள்ளது.




குழந்தையின் தலை பகுதி கிரில் கம்பிகளுக்கு மத்தியில் சிக்கி கொண்ட நிலையில் அலறல் சத்தம் கேட்டு பதை பதைத்து ஓடிவந்த பெற்றோர் கிரில் கம்பிகளுக்கு மத்தியில் குழந்தை சிக்கிக் கொண்டு தவிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களும் பெரும் குரல் எழுப்பி கத்த சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் பலரும் இந்த காட்சியை கண்டு அதிர்ந்துதான் போய்விட்டனர். பொதுமக்களில் ஒருவர் நிலைமையை புரிந்து கொண்டு அவசர அவசரமாக ஆக்சா பிளேடு கொண்டு வந்து குழந்தையின் தலை சிக்கிக் கொண்ட கிரில் கம்பியில் ஒன்றை அறுத்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினார்.


இருப்பினும் அதற்கு நேரம் ஆகும் என்பதால் மேலும் பொதுமக்களில் இருவர் வேகமாக வந்து குழந்தையை ஒருவர் பிடித்துக் கொள்ள மற்ற இருவர் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையை மீட்க இரு கம்பிகளையும் வெளிப்புறமாக இழுத்து விலக்கினர். இதனால் கம்பிகளுக்கு இடையில் இடைவெளி ஏற்பட்டு குழந்தையை தலையை பத்திரமாக  வெளியே எடுத்தனர்.





அதுவரை பதைபதைத்து போய் பார்த்துக் கொண்டு இருந்த பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். பயந்துபோன குழந்தையை அதன் தாய் தூக்கி ஆறுதல்படுத்தினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் சமயோஜிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருப்பினும் அதிர்ச்சியிலேயே அந்த குழந்தை வெகு நேரம் இருந்தது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண