கும்பகோணத்தில் சர்ச்சைக்குரிய வகையில் அம்பேத்கர் போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கரின் 66வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் அவரது சிலைக்கு, உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். அதேபோல் கட்சிகள் சார்பாக பல போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன. இதில் அம்பேத்கரை இந்துவாகச் சித்தரிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சி சார்பாக கும்பகோணம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் கடும் சர்ச்சையை கிளப்பியது.
அந்த போஸ்டரில் காவி உடையில் நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் அம்பேத்கர் படம் இடம் பெற்றிருந்தது. மேலும் காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம் என்று வாசகங்களோடு சுவரொட்டியில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், மாநிலச் செயலாளர் குருமூர்த்தி ஆகியோரின் படங்களும் இடம் பெற்றிருந்தது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து கும்பகோணம் நகரத்தின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்த இந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு அதிகரித்ததால் போலீசாரே அந்த சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கும்பகோணம் டிஎஸ்பி அலுவலகம் முன்பு தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் குருமூர்த்தியை போலீஸார் கைது செய்து கும்பகோணம் கிளைச்சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து சுவரொட்டியை அச்சடித்த, கும்பகோணம், உப்புக்காரத்தெருவில் அச்சகம் நடத்தி வரும், அண்ணலக் கிரஹாரத்தை சேர்ந்த சுபாஷ் மகன் மணிகண்டன் (35) என்பவரையும் போலீசார் கைது செய்து அவர் பயன்படுத்திய கணினி மற்றும் மின்னணு பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் குருமூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் கும்பகோணம் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.