தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான் கோயில் தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படுகிறது. இக்கோயிலில் வரும் 11ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.
இதற்காக 20 யாக குண்டங்களுடன் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் சுவாமி, தாயார் யாகசாலை பிரவேசம் செய்யப்பட்டு மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.
கோயில் ஸ்தாபகர் பிரம்ம ஸ்ரீ ராம தீட்சதர், பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆகியோரின் வழிகாட்டலுடன் 250 வேத விற்பன்னர்களின் சதுர்வேத பாராயணம், ஓதுவார்கள் திருமுறை பாராயணம், நாலாயிர திவ்ய பிரபந்தம் செய்திட முதல் கால யாகசாலை பூஜை கோலாகலமாக சிறப்பு பிரார்த்தனையுடன் தொடங்கியது. பிரம்மஸ்ரீ ஹரிஹர கனபாடிகள், சேங்காலிபுரம் ரவி தீட்சிதர் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
பண்டரிபுரம் துக்காராம் தலைமையிலான பாகவதர்களின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், இசைக்கலைஞர்களின் பக்தி பாடல்கள், பரதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளளும் நடந்தது. இரண்டாம் கால யாகசாலை பூஜையில் சூரியனார்கோயில் ஆதீனம் 28வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பாதிரிப்புலியூர் ஆதீனம் 9வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக ஆறுமுக மெய்ஞான சிவாச்சாரிய சுவாமிகள், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்தர் மகராஜ் மூத்த துறவி ஸ்ரீமத் ஜிதமானசந்தா மகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
அகில பாரதிய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமத் சுவாமி வேதாந்த ஆனந்தா, கோயில் நிர்வாக பொறுப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பஞ்சாபிகேசன், கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து வரும் 11ம் தேதி வெள்ளிக்கிழமை காலை வரை 11 கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கோயில் விமானத்திற்கு மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இது குறித்து நிர்வாகிகள் கூறுகையில், ”இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய தெய்வீக பசுக்கள் சேவை நோக்கத்துடன் வளர்க்கப்படுகிறது. புதிதாக 150 அடி உயர விமானத்துடன் மகாத்மா மகா மண்டபம், வசந்த மண்டபம், அர்த்த மண்டபம் என விசாலமாக கட்டப்பட்ட இக்கோயிலில் கடந்த 2011ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கும்பாபிஷேகம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கோயிலில் மீண்டும் புதுப்பிக்கும் பணிகள் பல லட்ச ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் 11ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக யாகசாலை மண்டபம், பிரமாண்டமான அளவில் நிகழ்ச்சி அரங்கம் அன்னதானக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது” என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்