தஞ்சாவூர்: ஆசனங்களின் அரசன் என்று கூறப்படும் சிரசாசனத்தை தொடர்ந்து 40 நிமிடங்கள் எவ்விதமான ஓய்வும் எடுக்காமல் செய்து காட்டி உலக சாதனை படைத்துள்ளார் தஞ்சை மாவட்டம் பேராவூரணி கேகே நகரில் அமைந்துள்ள திருமூலர் யோகாலயம் ஆசான் சு.விமல். இதையடுத்து அவரை தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.
ஆசனம்" என்றால் "உடல்நிலை" என்று பொருள்
ஆசனம்" என்றால் "உடல்நிலை" என்று பொருள். நாம் எவ்விதம் உட்காருகிறோம், நிற்கிறோம், நம் கைகளின் நிலை என எல்லாமே ஒரு ஆசனம்தான். எனவே எண்ணற்ற ஆசனங்கள் உள்ளது. எந்த உடல்நிலை உங்களை ஒரு உயர்ந்த வாய்ப்புக்கு இட்டுச் செல்கிறதோ, அதற்கு யோகாசனா என்று பெயர். அடிப்படையில் 84 யோகாசனங்கள்தான் உண்டு. இவை, ஒரு மனிதன் தன் உச்சநிலையை அடைவதற்கான 84 வழிமுறைகள் ஆகும்.
இயற்கையாகவே தியான நிலை
பதஞ்சலி முனிவர், தன் யோக சூத்திரத்தில், "சுகம், ஸ்திரம், ஆசனம்" என்கிறார். எந்த நிலையில் உங்களால், சௌகரியமாக, நிலையாக இருக்கமுடியுமோ அதுதான் உங்கள் ஆசனா. அப்படியென்றால், உங்கள் உடல், மனம் ஒருவித சௌகரியத்திலும், சக்தி என்பது முழு அதிர்விலும், சமநிலையிலும் உள்ளது. அப்படியிருக்கும்போது, நீங்கள் இயற்கையாகவே தியான நிலையில் இருப்பீர்கள்.
ஆசனங்களின் அரசன் சிரசாசனம்
ஆசனா என்பது, இயற்கையான தியான நிலைக்கு வர ஒரு தயார்படுத்தும் படிநிலை. எனவே, ஒருவிதத்தில், ஆசனா என்பது, தியானம் செய்ய சக்திவாய்ந்த வழிமுறை. ஆசனங்கள், உடற்பயிற்சி இல்லை என்பதை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஆசனங்களின் அரசன் எனச் சொல்லப்படும் ஆசனம் சிரசாசனம். என்றும் இளமையான தோற்றத்தையும், சோம்பலை போக்கியும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தரும் ஆற்றல் மிக்க ஆசனம். மூளையைச் செம்மைப்படுத்தி, அறிவாற்றலை அதிகரித்து, உடலுக்கும், முகத்திற்கும் தெளிவையும், வலுவையும், வசீகரத்தையும் தரும் ஆசனமாகும்.
சிரசானத்தின் முக்கிய பலன்கள்
மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளை நலனைப் பாதுகாத்தல், சஹஸ்ராரம், குரு மற்றும் ஆக்ஞா சக்கரங்களைத் தூண்டுவதன் மூலம் மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துதல் ஆகியவை சிரசாசனத்தின் முக்கிய பலன். சிரசாசனம் முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது. முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது. நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்துகிறது. ஹார்மோன்களின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இப்படிப்பட்ட சிரசாசனத்தை தஞ்சை பேராவூரணி கேகே நகரில் அமைந்துள்ள திருமூலர் யோகாலயத்தில் ஆசான் சு.விமல் தொடர்ந்து 40 நிமிடங்கள் செய்து உலக சாதனை படைத்தார். இதற்காக சாதனை நிகழ்ச்சியில் டோபெஸ்ட் நிறுவனர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டு சாதனையை பதிவு செய்தார். யோகா பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்த உலக சாதனையை ஆசான் விமல் செய்துள்ளதாக டோபெஸ்ட் நிறுவனர் நிர்மல் ராஜ் தெரிவித்தார்.
உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ்
இந்த உலக சாதனையை இன்டர்நேஷனல் ப்ரெய்டு வேர்ல்ட் ரெக்கார்ட் சென்னை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் அளித்துள்ளது. இதையடுத்து இந்த மாபெரும் சாதனையை செய்த ஆசான் விமலை நேரில் அழைத்து தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பாராட்டினார். மேலும் உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து யோகா பற்றிய விழிப்புணர்வை மாணவ, மாணவிகளிடையே கொண்டு செல்லும் வகையில் தஞ்சை மாநகராட்சி அரசு பள்ளிகளில் இலவசமாக கற்றுக் கொடுக்க அறிவுறுத்தினார்.
இதையடுத்து மாநகராட்சி மேயர் சண்.ராமதனின் வேண்டுகோளுக்கு இணங்க அரசு பள்ளிகளுக்கு யோகாசன பயிற்சிகளை இலவசமாக கற்றுத் தருவதாக ஆசான் விமல் உறுதி அளித்தார்.