தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் மாதம் 1-ந் தேதி நடைபெற உள்ளது. இக்கோயில் கலசங்கள் புத்தம் புதிதாக பொலிவு பெற்று பிரதிஷ்டைக்கு தயார் நிலையில் உள்ளன.
26வது தலம் ஆதி கும்பேஸ்வரர் கோயில்
காவிரி தென்கரையில் உள்ள தலங்களில் 26-வது தலமாக ஆதி கும்பேஸ்வரர் கோயில் உள்ளது. உலகம் தோன்றுவதற்கு ஆதி காரணமாக விளங்கும் பராபரம் கும்பத்தில் இருந்து இந்த கோயில் தோன்றியதால் கோவிலுக்கு ஆதி கும்பேஸ்வரர் கோயில் என பெயர் வந்தது. உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் போற்றப்படும் மகாமக பெருவிழா ஆதி கும்பேஸ்வரர் சாமி கோவிலிலுக்கு தொடர்புடைய விழாவாகும். இந்த கோவிலில் மந்திரபீடேஸ்வரி என்கிற மங்களாம்பிகை அம்பாளுடன் ஆதிகும்பேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
2009ம் ஆண்டில் நடந்த கும்பாபிஷேகம்
கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு இந்துசமய அறநிலையத்துறை, கோயில் நிர்வாகம், அறங்காவலர்கள் குழு மற்றும் உபயதாரர்கள் சார்பில் நிதி திரட்டப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 27- ந் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. கோயிலுக்கு பழைய கொடிமரம் பழுதான காரணத்தால் கேரளா மாநிலத்தில் இருந்து கொடிமரம் கொண்டு வரப்பட்டது. வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
44 கோபுர கலசங்கள் தயார்
இந்த நிலையில் கோயில் கோபுரங்களில் பிரதிஷ்டை செய்ய கலசங்கள் தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த பணி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. சில கலசங்கள் பிரதிஷ்டைக்கு தயார் நிலையிலும் உள்ளன. இதுகுறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் கோபுரங்களில் வைக்க மொத்தம் 44 கலசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
ராஜகோபுரத்திற்கு மட்டும் சுமார் 6 அடி உயரத்திற்கு 9 கலசங்கள் தயாராகி உள்ளது. மற்ற கோபுரங்களுக்கு 3¼ அடி முதல் 5 அடிவரை மாறுபடும். கோபுர கலசங்கள் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதால் எந்திரங்கள் பயன்படுத்தவில்லை. நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும் வகையில் பல்வேறு பொருட்கள் கொண்டு தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. கலசங்கள் தயாரிப்பதற்கு அனைத்து தொழிலாளர்களையும் பயன்படுத்தாமல் குறிப்பிட்ட நேர்த்தியாக வேலை செய்யும் தொழிலாளர்களை கொண்டு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் விரதம் மேற்கொண்டுள்ளனர். இந்த கலசங்கள் விரைவில் உரிய ஆகம விதிகளை பின்பற்றி கோபுரங்களில் பிரதிஷ்டை செய்ய உள்ளது என்று தெரிவித்தனர்.