கொரோனாவால் இறந்தவர்களின் நினைவாக ‘கைஃபா’ எனும் கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பில் உருவாகும் அடர்வனத்தை சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் போராவூரணி அருகே நாடியம் ஊராட்சியில், கிழக்கு கடற்சாலையில் உள்ள பிள்ளையார் திடல் பகுதியில் சுமார் 42 ஏக்கர் அரசு நிலம் கருவேல மரங்கள் மண்டியிருந்தது. இதையடுத்து, ‘கைஃபா’ எனும் கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தை நிர்வாகிகள், உரிய அனுமதி பெற்று கடந்த 3 மாதங்களாக கருவேல மரங்களை அகற்றி இடத்தை சுத்தம் செய்தனர்.
இந்நிலையில், அந்த இடத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் நினைவாக ‘கைஃபா’ அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து முதற்கட்டமாக 18 ஏக்கரில் மரக்கன்றுகளை நடுவதற்கான துவக்க விழா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடந்தது. இதில் கலந்துக்கொண்ட அவர் மரக்கன்றுக்களை நட்டு பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம், “தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 30 நாள்களில், பொதுமக்களின் வாழ்வாரத்தையும், கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற போராடி வருகிறார்.
தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு கடற்கரையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், கடற்கரை ஒரங்களில், எந்தந்த பகுதிகளில் அதிகளவில் மரக்கன்றுகளை நட முடியும் என்பது குறித்து ஆராய்ந்து மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக, கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தினர், மரக்கன்றுகளை நடும் பணியை துவங்கியுள்ளனர். இதில் கொரோனா பெரும் தொற்று காலத்தில், மக்களை காக்க முன்களப்பணியாளராக இருந்து உயிரை இழந்தவர்களின் நினைவுகளை போற்றும் வகையில், அவர்களின் பெயர்களில், மரக்கன்றுகளை நட்டு அடர்வனமாக உருவாக்க உள்ளனர்.
இது போன்ற செயல்கள் தமிழ்நாடு முழுவதும் தொடரும். கடலில் கழிவுகள் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுற்றுலா தலமாக உள்ள மனோரா மிகவும் சிறப்பு மிக்க இடம். இதை மேம்படுத்த முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பாலசுப்பிரமணியன், கைஃபா நிர்வாகிகள் கார்த்திகேயன், நிமல்ராகவன், நவீன் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.