கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள், சிவபுரனி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. டேவிட் வெளிநாட்டில் பல மாதங்களாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி செவ்வாய் கிழமை திருப்பனந்தாளில் உள்ள வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அனிதா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அனிதா கிடைக்கவில்லை. அவர் குறித்து தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அனிதாவின் உறவினர்கள்,  திருப்பனந்தாள் போலீசில் புகார் அளித்தனர். மேலும் வாட்ஸ்அப் குழுக்களில் அவரது புகைப்படத்தை பதிவிட்டு நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு கடத்தப்பட்டாரா?, அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா? திருப்பனந்தாள் போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே மாவட்ட கலெக்டரும், எஸ்.பியும் தலையிட்டு 2 குழந்தைகளுக்கு தாயான அனிதாவை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டு, வாட்ஸ்ஆப் மூலம் தகவல் வெளியானது. இதனால் போலீசார், அனிதாவை பற்றி விசாரணையை தொடங்கினர். இதையடுத்து போலீசார், அனிதா பயன்படுத்திய செல்போனை ஈஎம்ஐ நம்பர் ஆய்வு செய்தனர். அதில் அனிதாவின் செல் பாபநாசத்தில் டவர் காட்டியதையடுத்து, செல்போனை கைப்பற்றினர். பின்னர், கால் ரிக்கார்டரை ஆய்வு  செய்தனர். அதில் அனிதா காணாமல் போன அன்று அவரிடம் கடைசியாக பேசிய நபரின் செல்போன் எண்ணை கண்டுபிடித்தனர்.




அதில், கடைசியாக பேசியது, அனிதா வீட்டின் எதிரிலுள்ள வீட்டில் வசித்து வரும் செல்லப்பாண்டி மகன் கார்த்தி என்பவருடைய செல்போன் எண் என தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், கார்த்தி, அனிதாவை கொலை செய்து ஒரு இடத்தில் புதைத்து விட்டதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர் புதைத்ததாக கூறிய இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து, கார்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் அனிதாவை கொலை செய்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் வனிதாவின் கணவர் கார்த்திக் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் அவர் அங்கிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றார்.




ஞாயிற்று கிழமை விடுமுறை நாள் என்பதால் இன்று தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் மற்றும்  அரசு மருத்துவர்கள் முன்னிலையில் அவர் கொலை செய்து புதைத்ததாக கூறப்படும் இடத்தை தோண்டி அதில் அனிதா உடல் கிடைக்கும் பட்சத்தில் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்படும் எனவும், அதன் பின்னர் கொலைக்கான முழுகாரணம் தெரியவரும் என கூறப்படுகிறது. போலீசார் விசாரணையில், அனிதாவுடன், கார்த்தி குடும்பத்தினர் பழகி வந்துள்ளனர். அனிதாவின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததால், அவரிடம் பணம் புழங்கியது. மேலும் நகைகளும் அதிகமாக இருந்துள்ளது. இதனால் பணத்திற்கும், நகைக்கும் ஆசைப்பட்ட, கார்த்தி குடும்பத்தினர்கள், அனிதாவிடம் சிறுக சிறுக ரூ. 7 லட்சம் வரை வாங்கியுள்ளனர். மேலும் நகைகளையும் வாங்கி கொண்டனர். இந்நிலையில், பணம், நகைகளை அதிகமாக கொடுத்ததால், அனிதா, தனது கணவர், வெளிநாட்டிலிருந்து வரப்போகிறார். அவர், சம்பாதித்து அனுப்பிய பணத்தையும், நகைகளை கேட்டால், பிரச்சனையாகி விடும் என்பதால், அனிதா, கார்த்திக்கிடம், தான் கொடுத்த பணம், நகைகளை கேட்டுள்ளார். ஆனால் கார்த்தி குடும்பத்தினர், தர மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அனிதா, தான் கொடுத்த பணம், நகைகளை கொடுக்காவிட்டால், எனது கணவரிடமும், காவல் நிலையத்தில் புகாரளிப்பேன் என்று கூறியுள்ளார்.


இதனையறிந்த கார்த்தி குடும்பத்தினர், அனிதாவை, வங்கி போகலாம் என்று ஆசைவார்த்தை கூறி, குடும்பத்துடன் அடித்து கொன்றனர். பின்னர், அவரது உடலை தார்பாயால் சுருட்டி, அனிதவின் வீட்டின் பின்புறமுள்ள திடலில் புதைத்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார், அனிதாவின் உடலை தோண்டி எடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும், கார்த்தி குடும்பத்தினருடன், அனிதாவை கொலை செய்வதற்கு வேறு காரணம் உள்ளதா எனவும், இது தொடர்பாக கார்த்தி, இவரது தந்தை செல்லப்பாண்டியன், மைத்துனர் சரவணன் மற்றும் சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குடும்பத்துடன், இளம் பெண்ணை கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.