தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வளவன்புரத்தில் பூட்டிக் கிடக்கும் தென்னை வணிக வளாகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தமிழ்நாடு வளர்ச்சிக்குழு உறுப்பினரும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டிஆர்பி ராஜா ஆகியோர், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த வணிக வளாகம் சுமார் 21 ஏக்கர் நிலப்பரப்பில், கடந்த 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது கருணாநிதி முதல்வராக இருந்தபோது 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் அது கவனிக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. தென்னை வணிக வளாகத்தில் தேங்காய் கொள்முதல், கொப்பரை கொள்முதல், எண்ணெய் உற்பத்தி, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பணிகள் செயல்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக அது கடந்த 10 ஆண்டுகளாக பூட்டி கிடந்தது. தற்போது அங்குள்ள கட்டிடம், இயந்திரங்கள் என்ன நிலையில் உள்ளது. அதனை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியுமா என ஆய்வு செய்யப்பட்டது.
இப்பகுதி தென்னை விவசாயிகள் 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அண்மையில் வெளியிடப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் தென்னை வளர்ச்சி வாரிய துணை மண்டல அலுவலகம் பட்டுக்கோட்டையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தென்னை வணிக வளாகத்தில் உள்ள கட்டிடங்களை தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், மாநில வளர்ச்சி கொள்கைக்குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான டிஆர்பி.ராஜா, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி தென்னை விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர் வேளாண் விற்பனைக் குழு செயலாளர் சுரேஷ் பாபு, வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மரியா ரவி, இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வீரசேனன், அப்துல் மஜீத் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், உறுப்பினர் டிஆர்பி ராஜா ஆகியோர் இதுகுறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவர் எனக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் மீண்டும் தென்னை வணிக வளாகம் திறக்கப்படும் என தென்னை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.