தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கொற்கை கிராமத்தில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற ருத்ர யாகத்தில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு தமிழ் மொழியில் மந்திரங்களை கூறி சிறப்பு வழிபாடு நடத்தினர்.


தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
என்று பாரதிதாசன் தமிழை அமுதத்திற்கு சமமாக பாவித்து பாடல் புனைந்தார். உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் நம் தமிழ் மொழிக்கும், தமிழர்களின் கலாச்சாரத்திற்கு என்று எப்போதும் தனி மரியாதையும், மதிப்பும் உண்டு. முக்கியமாக ஜப்பான் மக்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்தின் முத்து படம் ஏற்படுத்திய தாக்கத்தை குறிப்பிட வார்த்தைகளே இல்லை. 1998 ஆம் ஆண்டில், ரஜினிகாந்தின் முத்து திரைப்படம் ஜப்பானிய ரசிகர்களின் அற்புதமான வரவேற்பைப் பெற்றது


வெளிநாடுகள் பலவற்றில் ரஜினியின் படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றாலும் பெரும்பாலும் ஜப்பானியர்கள் தான் ரஜினி படங்களை விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியான முத்து, அருணாச்சலம், பாட்ஷா, தர்பார் போன்ற படங்கள் ஜப்பானில் நல்ல வசூல் பெற்றன. அங்கு ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது நடிகர் விஜய்யின் மாஸ்டர் படமும் ஜப்பானில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்தளவிற்கு தமிழ் மொழி மீது ஜப்பானிய மக்களுக்கு மிகவும் விருப்பம்.


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கீழ கொற்கை கிராமத்தில் புஷ்பவல்லி உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. அவிட்ட நட்சத்திரத்திற்குரிய பரிகார தலமாகவும்,  கோரக்க சித்தர் வழிபட்ட தலமாகவும், விளங்குகிறது இத்தகைய சிறப்பு பெற்ற இத்தலத்திற்கு ஜப்பான் நாட்டில் இருந்து, அங்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானியர்களுக்கு தமிழ் மொழி குறித்தும், சித்தர்கள் குறித்தும் பாடம் எடுத்து வரும் தமிழகத்தின் மரக்காணம் பகுதியை சேர்ந்த கோபால் பிள்ளை சுப்பிரமணியன் என்பவரது தலைமையில், முனைவர் தக்கா யுகி ஹொசி (எ) பால கும்ப குருமுனி உட்பட 15 பேர் கொண்ட ஜப்பானிய குழுவினர் வருகை தந்தனர்.


இவர்கள் அனைவரும், சித்தர்கள் காட்டிய வழியை பின்பற்றி  தமிழ் மீதும் கொண்ட பற்று, தமிழ் கடவுள்கள், தமிழர் கலை, பண்பாடு, கலாச்சாரம் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக இத்தலத்தில் சிவாச்சாரியார்கள் கொண்டு சிறப்பு யாகம் வளர்த்து மூலவர் புஷ்பவள்ளி சமேத பிரும்புரீஸ்வரருக்கு விஷேக அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்தனர்.  இவர்கள் அனைவரும் உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ் என்பதிலும், அதனால் உலகின் முதல் கடவுள் முருகன், சிவன் மற்றும் சித்தர்களின் முதன்மையானவர் அகத்தியர் என்றும் நம்பிக்கை கொண்டு இந்த வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்


தொடர்ந்து இக்குழுவினர் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலைக்கும், சைவத்தலமான திருவண்ணாமலை, சிதம்பரம் உள்ளிட்ட கோயில்களுக்கும் சென்று வழிபட திட்டமிட்டுள்ளனர். இதில், பால கும்ப குருமுனி, வணக்கம், நன்றி என்பதோடு மட்டுமல்லாது, தமிழ் கடவுள்களான முருகனுக்கு, சிவனுக்குரிய மந்திரங்களை தமிழில் கூறியும், அசத்துகிறார்.




ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தக்கா யுக்கா ஜோசி கூறுகையில்,"பழமையான பாரம்பரியமிக்க இந்திய கலாச்சாரம் குறிப்பாக தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு, தமிழ் மொழி மீது எங்களுக்கு மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. தமிழ் கலாச்சாரத்தை கற்றுக் கொள்ளவும், ஆன்மிக வழிபாடுகளை மேற்கொள்ளவும் நாங்கள் இந்தியா வந்தோம். பழம்பெருமை வாய்ந்த கும்பகோணம் நகரில் உள்ள பல்வேறு கோவில்களை நேரில் சென்று தரிசனம் செய்தோம். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும், பரவசத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழக கலாசாரத்தையும் பண்பாட்டையும் இறை வழிபாடு குறித்தும் ஜப்பான் நாட்டில் பரப்புவதே எங்களது நோக்கம்". இவ்வாறு அவர் கூறினார்.