திருத்துறைப்பூண்டி அருகே கிராம மக்கள் குடிக்கும் கிணற்று நீரில் குளத்து தண்ணீர் உட்புகுவதால் பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள் ஏழு பேரூராட்சி 10 ஊராட்சி ஒன்றியங்கள் 534 ஊராட்சிகள் என 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இன்று வரை பல ஊராட்சிகளில் சாலை வசதி இல்லாமலும் குடிநீர் வசதி கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் இன்றளவும் தவிர்த்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பல கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சனை என்பது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இவர்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தவிர வேறு எந்த வசதியும் இல்லாத காரணத்தினால் பல கிராமங்களில் உப்பு கலந்த தண்ணீர் நிலத்தின் மூலம் கிடைப்பதை பயன்படுத்திய தங்களது குடிநீர் ஆதாரத்தை பூர்த்தி செய்து வருகின்றனர். அந்த வகையில் திருத்துறைப்பூண்டி அருகே குன்னூர் ஊராட்சிக்குட்பட்ட மயில்ராவணன் கிராமத்தில் கிணற்று மூலமாக அந்த கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வரும் மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாவதாக நாள்தோறும் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகமும் அரசு அதிகாரிகளோ யாரும் கண்டு கொள்ளவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குன்னூர் ஊராட்சிக்கு உட்பட்ட மயில்ராவணன் கிராமத்தில் புதுத்தெரு கட்டளைத் தெரு மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கிணறு ஒன்று தோண்டப்பட்டது. இந்த கிராமங்களில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்துக்கு குடிநீர் வழங்க அந்த ஊரில் உள்ள ஊருக்கு என பொதுவாக வெட்டப்பட்ட கிணறு ஒன்று மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிணற்றை சரிவர பராமரிக்க இயலாத நிலையில் கிணற்றில் பல உயிரினங்கள் இறந்து விழுகின்றன. இந்த நிலையில் அந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படும் குடிநீரும் அருகில் உள்ள குளத்தின் நீரின் நிறமும் ஒரே மாதிரி உள்ளன. மேலும் இந்த கிணற்றில் இருந்து இந்த கிராமங்களுக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு அதன் மூலமாக வரும் குடிநீரை பருகுவதால் அவ்வப்போது காய்ச்சல் வயிற்றுக்கோளாறு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு ஆளாக வேண்டி உள்ளது. இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலகம் வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை.
குன்னூர் ஊராட்சியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் விளக்குடி உள்ளிட்ட கிராமங்களில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் இணைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் சீராக நடைபெற்று வரும் நிலையில், குன்னூர் கிராமத்துக்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட இணைப்பு வழங்க வேண்டும் என குன்னூர் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் மலர்கொடியிடம் கேட்டபோது, இது தொடர்பாக நேரில் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த பிரச்சனை தொடர்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாரிமுத்துவிடம் கேட்டதற்கு இந்த பிரச்சனை குறித்து இதுவரை எனக்கு தெரியாது உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளை சந்தித்து உடனடியாக அந்த கிராம மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அந்த பகுதியில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தெரிவித்தார்.