தஞ்சாவூர்: பொங்கல் ஜல்லிக்கட்டுக்கு அட்டகாசமாக தங்களின் காளையை தயார்படுத்தி வருகின்றனர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு நெருப்பு பாய்ஸ் குழுவினர். இதற்காக மாடுகளுக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கின்றனர்.
சங்க கால இலக்கியங்களில் ஏறு தழுவுதல் பற்றிய பல பாடல்கள் இளைஞர்களின் வீரத்தை காட்டுகிறது. கலித்தொகை பாடல்களில் ஒரு பகுதி ஏறுதழுவுதல் பற்றியும் காளைகளையும், பங்கெடுத்த வீரர்களையும் விவரிக்கிறது. தற்போது ஜல்லிக்கட்டு என்று கூறுவதை சங்க காலத்தில் ஏறு தழுவுதல் என்று கூறியுள்ளனர். மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த மன்னன் கொற்கை பாண்டியனின் நாணயத்தில் ஜல்லிக்கட்டு காளை இடம் பெற்றுள்ளது. உலகிலேயே வெறும் கைகளால் காளைகளை அடக்குவது தமிழர்கள் தான். தமிழ்நாட்டில் மூன்று வகைகளில் காளைகளை அடக்கும் வீர விளையாட்டுகள் நடக்கின்றன. அவை ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு ஆகும்.
வாடிவாசல் அமைத்து காளைகளை அடக்குவது ஜல்லிக்கட்டு. பெரிய மைதானங்களில் அல்லது மஞ்சுவிரட்டு தொழுவத்திலிருந்து காளைகளை அவிழ்த்து விடுதல் மஞ்சுவிரட்டு ஆகும். வடம் கட்டி (நீண்ட கயிறு) உள்ள காளைகளை அடக்குவது வடமாடு மஞ்சுவிரட்டு எனப்படும். தற்போது பொங்கல் பண்டிகை வருவது ஒட்டி ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகி வரும் நெருப்பு பிரதர்ஸ் குழுவினர் தங்களின் காளைகள் அட்டகாசமாக களம் இறங்க தயார்படுத்தி வருகின்றனர். அசுரன், ஈஸ்வரன் என இவர்கள் பயிற்சி அளிக்கும் காளைகள் அனல் தெறிக்க விடுமாம்.
ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் வரும் பொங்கலை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்திலும் காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தீபன் குமார் (36) என்ற இளைஞர் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை வளர்த்து வருகிறார். இவரது தந்தை சம்பந்தம், தாயார் சந்திரா. இவருடைய குழுவின் பெயர் நெருப்பு பிரதர்ஸ்.
தீபன் குமார் கால்பந்து போட்டியாளராக இருந்து ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவராக மாறியுள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்த தீபன் குமார் தமிழ்நாடு அளவில் பல கால்பந்து போட்டிகளில் பங்கேற்று மிகச் சிறந்த போட்டியாளராக இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட விபத்தால் காலில் அறுவை சிகிச்சை செய்ததை அடுத்து போட்டியில் விளையாடுவதை நிறுத்திக் கொண்டார்.
திருவையாறு மாவட்டத்தில் கொற்கை பண்ணையில் முதன் முதலாக உம்பளச்சேரி வகையை சேர்ந்த காளையை வாங்கி அதற்கு பயிற்சி அளிக்க கற்றுக்கொண்டு பயிற்சி அளித்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வைத்துள்ளார். இவரின் காளை பிடிபடாத நிலையில் பின்பு தொடர்ந்து காளைகளை வளர்த்து வந்துள்ளார்.
தற்போது இவரிடம் ஐந்து காளைகள் உள்ளன. அனல் பறக்க வைக்கும் இரும்புத்தலை, சுவாசத்திலேயே வெப்பக் காற்றை வீசி வீரம் பேசும் ஈஸ்வரன், திரிசங்கு, அசுரன் என அதிரிபுதிரி காட்டுகின்றன தீபன் குமாரின் காளைகள்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளை களத்தில் இறக்க பயிற்சிகளை கொடுத்து வருகிறார் தீபன் குமார். காளைகளுக்கு நீச்சல், மண் குத்துதல் என பல பயிற்சிகள் அளிக்கிறார். காளைகளை வளர்ப்பதன் மூலம் பெரிதளவில் வருமானம் இல்லை என்பதால் சொந்தமாக கயிறு கடையும் வைத்துள்ளார். இந்த கடையும் இந்த காளைகளுக்காகவே திறந்துள்ளார்.
இவர் வளர்த்த பல காளைகள் பல போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளை பெற்றுள்ளன குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் தான் வளர்க்கும் காளைகளை தனது நண்பர்களிடம் அளித்து அவர்களை வளர்க்கச் செய்கிறார் காரணம் நமது பாரம்பரியம் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே தான் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளைகளை இலவசமாக தான் அளிக்கிறார்
ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பு பற்றி தீபன் குமார் கூறியது: நம்ம பாரம்பரியம் அடுத்த தலைமுறைகளுக்கும் முழுமையாக தெரியணும் இதுக்காகவே எங்க நெருப்பு பிரதர்ஸ் குழு காளைகளை பெருமைக்காகவே தான் வளர்கிறோம். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது எங்களுடைய வருமானத்துக்காக அல்ல. ஜல்லிக்கட்டு பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான். நான் வளர்க்கும் காளைகள் சில சமயம் எனக்கே பாய்ச்சல் காட்டும். ஆனா எங்க அம்மாவிடம் குழந்தைகள் போல் அமைதியாக சாந்தமாக நடந்து கொள்ளும்.
காளைகளுக்கு இயற்கை தானியங்களை தான் அளிக்கிறோம் இதற்கு ஒரு நாளைக்கு குறைந்தது ரூ. 500 செலவாகிறது. இருப்பினும் அதையெல்லாம் நாங்கள் நினைவில் வைத்துக் கொள்வதில்லை இங்கு நிற்கிற அஞ்சு காளைகளும் என் கூட பிறந்தவர்கள் மாதிரி தான் பார்க்கிறேன். நெருப்பு பிரதர்ஸ் குழுவுல வீரபாண்டி சாமிநாதன், பாரத், வீரமுருகன், சிவராஜ், நந்தகுமார், கலை என எல்லாரும் சேர்ந்து தான் போட்டிக்கு காளைகளை தயார் படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.