தஞ்சாவூர்: விளைச்சல் அதிகரிப்பால் பலாப்பழம் விலை மலிவாக விற்கப்படுகிறது. தஞ்சாவூர் பகுதிகளில் லோடு ஆட்டோக்களில் எடுத்து வந்து கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களும் இதை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.
தமிழகத்தில் பலாப்பழம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதிகளிலும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் அதிக அளவில் விளைகிறது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, கீரமங்கலம், ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிக அளவில் விளைகிறது. இந்த பகுதிகளில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கரில் பலா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகளவில் பலாப்பழங்கள் விளைந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் பலாப்பழங்கள் அருகில் உள்ள மண்டிகள் மூலம் உள்ளூர், வெளி மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. வடகாடு பகுதி பலாப்பழம் ருசியாகவும், தித்திப்பாகவும் இருப்பதால், மார்க்கெட்டில் இதற்கு என்று நல்ல வரவேற்பும் உள்ளது.
இந்நிலையில், மண்டிகளுக்கு தற்போது பலாப்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், விலையோ கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் அறுவடை செய்த பழங்களை விவசாயிகள் சொற்ப விலையிலேயே விறபனை செய்து வருகிறார்கள். வியாபாரிகளும், விவசாயிகளிடம் இருந்து டன் கணக்கில் வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள்.
முன்பெல்லாம் ஒரு கிலோ பலாப்பழம் ரூ.36க்கு விற்பனை ஆனது. இந் நிலையில், தற்போது விவசாயிகளிடம் ரூ.5க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. சில பலாப்பழ மண்டிகளில் வேண்டா வெறுப்பாக பலாப்பழங்களை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். சிறிய அளவிலான பழங்களை வாங்கவே மறுக்கின்றனர். தோப்புகளிலும், கடைகளிலும் அழுகிய பழங்கள் அதிகம் காணப்படுகின்றன.
இதனால் விவசாயிகளுக்கு பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தென் மேற்கு பருவமழையால் தான் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்த பலாப்பழங்களை வியாபாரிகள், சரக்கு ஆட்டோக்களில் கொள்முதல் செய்து வந்து கிலோ ரூ.20-க்கு தஞ்சாவூர் பகுதிகளில் விற்பனை செய்கிறார்கள்.
தஞ்சை மாநகரில் மட்டும் 4க்கும் மேற்பட்ட சரக்கு ஆட்டோக்களில் பலாப்பழங்களை கொள்முதல் செய்து வந்து வியாபாரிகள் கூவி, கூவி விற்பனை செய்கிறார்கள். சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தி வைத்து கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்வதால் பொதுமக்களும் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். விலை மலிவாக கிடைப்பதாலும் பலாப்பழம் வாங்க பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், வழக்கத்தை விட இந்த ஆண்டு பலாப்பழம் விளைச்சல் அதிகமாக காணப்படுகிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பலாப்பழங்களை வியாபாரிகள் வாங்கிக் கொண்டு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச்சென்ற வண்ணம் உள்ளனர். சரக்கு ஆட்டோக்களில் 1 டன் வரை பலாப்பழம் வாங்கி வந்து விற்பனை செய்கிறோம்.
கிலோ ரூ.20க்கு விற்பனை செய்கிறோம். மக்களும் பலாப்பழத்தை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். 2 நாட்களுக்கு ஒரு முறை நாங்கள் சென்று பழங்களை கொள்முதல் செய்து வருகிறோம். தஞ்சாவூர் நகர் பகுதிகள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளுக்கும் சென்று விற்பனை செய்கிறோம்.
கிராமங்களுக்கு செல்லும் போது டீசல் அதிகம் ஆகும் என்பதால் சற்று கூடுதல் விலைக்கு விற்கிறோம். பலாப்பழம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது, இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பது, தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, எடை இழப்புக்கு உதவுவது மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுவது போன்ற பல நன்மைகளை கொண்டுள்ளது. இதனால் மக்களும் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.