தஞ்சாவூர்: தஞ்சாவூரில் 6 குடிநீர் உறிஞ்சும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதன் எதிரொலியாக டேங்கர் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் தொழிலுக்கு உரிய அரசாணை வழங்க கோரி தஞ்சாவூர் மாவட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.
தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டையில் 6 குடிநீர் உறிஞ்சும் நிறுவனங்களுக்கு சீல் வைத்ததன் எதிரொலியாக, டேங்கர் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் தொழிலுக்கு உரிய அரசாணை வழங்க கோரி தஞ்சாவூர் மாவட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர். இரண்டாம் நாளாகவும் இன்றும் போராட்டம் தொடர்ந்தது.
தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டையில் உரிய அனுமதியின்றி இயங்கி வந்த 6 குடிநீர் உறிஞ்சும் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் தஞ்சாவூர் கோட்டாட்சியர் நித்யா சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார். இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று மாதாக்கோட்டையில் திடீரென ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
கூட்டத்துக்கு பின் சங்கத்தின் மாவட்ட தலைவர் சூசைராஜ், மாவட்ட செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 30 ஆண்டுகளாக வாட்டர் சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். கஜா புயல் பாதிக்கப்பட்ட போது, இரவு பகல் பார்க்காமல் பொதுமக்களுக்கு குடிநீரை வழங்கிய நாங்கள், பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கி வருகிறோம். மேலும், கட்டுமான பணிகளுக்கும், சாலை அமைக்கும் பணிக்கும், போர் அமைக்கும் பணிக்கும் தண்ணீரை வழங்கி வருகிறோம்.
அதே போல் அரிசி அரவை ஆலைகளுக்கு தேவையான தண்ணீரை வழங்கி வருகிறோம். மக்கள் அதிகம் கூடும் இடங்கள், திருவிழாக்கள் போன்ற இடங்களில் தேவையான தண்ணீரை வழங்கி வருகிறோம். தீ விபத்து ஏற்படும் போது கூடுதலாக தீயணைப்பு துறையினருக்கு தேவையான தண்ணீரை வழங்கி அவர்களுகோடு இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
வாட்டர் சப்ளை தொழிலுக்கு உரிமம் பெற கடந்த 2004, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் பல்க் வாட்டர் பிரிவில் உரிமம் பெற நாங்கள் தமிழக அரசை அணுகியபோது, அதற்கான எந்த அரசாணையும் இல்லை, கேன் வாட்டர் தொழிலுக்கு மட்டுமே உரிமம் உள்ளது என கூறிவிட்டனர். இதனால் நாங்கள் உரிமம் பெற முடியாமல், அதற்கான அரசாணையும் இல்லாமல், போதிய வழிகாட்டுதலும் இல்லாமல் உள்ளோம்.
இந்நிலையில், தஞ்சாவூரில் உரிமம் இல்லாமல் செயல்பட்டதாக மாவட்ட நிர்வாகம் 6 நிறுவனங்களுக்கு சீல் வைத்துள்ளது. இதனால் நேற்று காலை முதல் குடிநீர் விநியோகம் செய்ய முடியாமல் அத்தியாவதியப் பணிகளும், கட்டுமான பணிகளும் முடங்கியுள்ளது.
எனவே, எங்களது தொழிலுக்கு உரிய அரசாணை வழங்கி, உரிமம் வழங்க வேண்டும், சீல் வைக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்களுக்கான சீலை மாவட்ட நிர்வாகம் அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிற குடிநீர் உறிஞ்சும் நிறுவனங்களும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் 500 தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காணாவிட்டால், மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.