தஞ்சாவூர் கலைத் தட்டுக்கு புவிசார் குறியீடு கடந்த 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த தலைட்டு உற்பத்தி செய்யும் ஒவ்வொருவரும் தனித்தனியாக அதற்கான சான்றிதழை பெற வேண்டும் என சட்ட விதி இருப்பதால், இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் இந்த புவிசார் குறியீடு அங்கீகார சான்றை பெற்றுள்ளனர். இதை அடுத்து தஞ்சாவூரில், தஞ்சாவூர் கலைத்தட்டு உற்பத்தி செய்யும் கைவினை கலைஞர்கள் 27 பேருக்கு அங்கீகார சான்று வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கைவினை கலைஞர் ராஜா தலைமை வகித்தார். இதில் 27 பேருக்கு புவிசார் குறியீடு அங்கார சான்றை தமிழக அரசின் புவிசார் குறியீடு வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி வழங்கினார். முன்னதாக, தஞ்சாவூர் மாவட்ட கலைத் தட்டு தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ப.சஞ்சய்காந்திக்கு, இந்தியாவின் தலைசிறந்த புவிசார் குறியீடு வழக்கறிஞருக்கான விருதை வழங்கினார்.


இது குறித்து கலை தட்டு தயாரிப்பவர்கள் கூறுகையில், தலையாட்டி பொம்மை, வீணை வரிசையில் தஞ்சாவூரின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று கலைத்தட்டு. கௌரவம், உபசரிப்பு, மரியாதையின் வெளிப்பாடாக கருதப்படும் இந்த கலைத்தட்டில் தஞ்சைக்கே உரித்தான நுண்கலையும், கைத்திறனும், கற்பனையும், தெய்விக அம்சமும் நிறைந்திருக்கிறது. சுவரை அலங்கரிக்கும் தனித் தட்டாகவும், பூஜையறைகளில் வைத்து வணங்கப்படும் இறை உருவாகவும், கேடயங்களாகவும், நினைவுப்பரிசுகளாகவும், சின்னங்களாகவும் உருவாக்கப்படுகிற இந்தக் கலைத்தட்டுக்கு புவிசார் காப்பீட்டு உரிமையையும் கிடைத்துள்ளது.


ராஜராஜ சோழன் காலத்தில் போர் வெற்றிச் செய்திகளையும், மெய்க்கீர்த்திகளையும் தாமிரப் பட்டயங்களில் எழுதும் வழக்கம் இருந்தது. அதன் தொடர்ச்சி தான் இந்தக்கலை என்றும் கூறுவார்கள். தஞ்சாவூர் கலைத்தட்டு என்பது தஞ்சாவூரில் பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட ஒரு கலைபொருளாகும், இந்த கலை தகடுகள் வட்ட வடிவில் உள்ளன. பரிசுப்பொருட்களாகவும் தயாரிக்கப்படுகின்றது. தஞ்சாவூர் கலைத்தட்டு 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து வருகிறது.  மாராட்டிய மன்னர்களில் ஒருவரான இரண்டாம் சரபோஜி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.




திறமையான கைவினைஞர்களை தனது ராஜ்யத்தின் மகிமையைப் பிரதிபலிக்கும் விதமாக உலோக கலைப் பொருட்களைக் கொண்டு பித்தளை, வெள்ளி, தாமிரத்தால் செய்யப்பட்டன. தஞ்சாவூர் கலைத் தட்டுகள் இக்கலை பொருள் தஞ்சாவூர் விஸ்வகர்மா சமூகத்தினரால் செதுக்கப்பட்டது. இந்த பரம்பரைக் கலை அவர்களின் வாழ்வாதாரமாகவும் அமைகிறது. இது பிரதானமாக வீடுகளில் கைவினைஞர்களினால் உருவாக்கப்படுவதால், குடிசைக் கைத்தொழிலாக வரையறுக்கப்பட்டு உள்ளது. இதனுடைய உற்பத்தி உள்ளூர் நபர்களின் தனியுரிமையாக மாத்திரம் உள்ளது. கம்மாளர் என்ற சமூகத்தினர் தஞ்சைக் கலைத்தட்டினை பரம்பரையாகச் செய்து வருகின்றனர். இவர்களைக் கன்மாளர், பஞ்சாலத்தார், அஞ்சுபஞ்சாலத்தார், ரதிகாரர், ஸ்தபதி, தட்டான், பெருந்தட்டான், தட்சன், பெருஞ்தச்சன், கொல்லன், பெருங்கொல்லன் ஆகிய பெயர்களில் அழைக்கின்றார்கள்.  




இது பரம்பரைத் தொழிலாக இருந்தாலும் இதற்கு அங்கீகார சான்று பெறுவது  அவசியம். இந்த சான்றிதழ் இருந்தால் தான் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலை செய்ய முடியும். இந்த சான்றிதழை வடிவமைப்பாளர்கள் ஒவ்வொருவரும் பெற்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்வேறு வகையான வெளிநாட்டில் இருந்து வரும் பொருட்களை பரிசாகவும், நினைவாகவும், நிகழ்ச்சிகளில் வழங்கி வந்தார்கள். தற்போது சில ஆண்டுகளாக தஞ்சாவூர் கலை தட்டுக்களை, வாங்குபவர்கள் கேட்கும் வகையில் வித்தியாசமாகவும், நேர்த்தியாகவும் தயாரித்து வழங்குகிறார்கள். இதனால் தஞ்சாவூர் கலை தட்டு தேவை அதிகரித்து வருகின்றது. புவிசார் குறியீடு சான்று பெற்றுள்ள நிலையில். அவர்கள் வெளிநாடு, மாவட்டங்களிலும் விற்பனை செய்யலாம் என்றார்.