மயிலாடுதுறை அருகே 45 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் முத்தப்பன் வாய்க்கால். 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி.




கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க முடியாத சூழல் நிலவி வந்தது கடந்த இரண்டு ஆண்டுகளாக மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் நீர்மட்டம் இருந்து வருவதால் கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்ட முழுவதும் பெருமளவு விவசாயம் செய்யப்பட்டது. மேலும் இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் தற்போது 100 அடி நீர்மட்டம் உள்ளதால் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்க வேண்டுமென டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்தநாள் அன்று தமிழக முதல்வர் 
மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க உத்தரவை பிறப்பித்துள்ளார்.




இதனிடையே தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் ஆறு மற்றும் வாய்க்கால்களில் 65 கோடி ரூபாய் செலவில் தூர் வாரும் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும், இப்பணிகள் முழுமையாகவும் வேகமாகவும் நடைபெறுவதற்காகவும், 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்கால்கள் மற்றும் வடிகால்கள் ஆகியன 431 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் தற்போது தூர்வாரப்படுகிறது. இதற்காக 5 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த மே மாதம் 28 ஆம் தேதி கனரக வாகனங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடங்கின. 


இப்பணிகளை வரும் ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணையில் பாசனத்திற்காக திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தடைவதற்கு முன்னதாக முடிக்க திட்டமிடப்பட்டு துரிதமாக நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில் மயிலாடுதுறை அடுத்த மூவலூர் காவிரி ஆற்றின் நீர் ஒழுங்கியில் இருந்து பிரியும் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுள்ள முத்தப்பன் வாய்க்கால் கடந்த 45 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் காடுகளும், புதர்களும் மண்டி பாசனத்திற்கு நீர் செல்லாதவாறு தூர்ந்து போய் காணப்பட்டது. தற்போது 45 ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் பொதுப்பணித்துறை மூலம் 2 லட்சத்தி 75 ஆயிரம்  ரூபாய் மதிப்பீட்டில் தற்போது தூர்வாரப்படுகிறது.




இதனால் கடந்த பல ஆண்டுகளாக காவிரி நீர் சரிவர வராததால் முறையாக விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்த விவசாயிகள் தற்போது இதன்மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று விவசாயம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது, மேலும் இப்பகுதி சுற்று வட்டார முழுவதும் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்பதால் தமிழக அரசுக்கும், பொதுப்பணித்துறைக்கும் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.