தஞ்சாவூர்: விஜய் கட்சி துவங்கியதே தி.மு.க.வை பற்றி சாடுவதற்காக தான். இதில் கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை. விஜய் ஏற்கனவே அரைத்த மாவை அரைத்துக்கொண்டு இருக்கிறார். அப்படி அரைத்தால் மாவு தான் வீணாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.


தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து காலதாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதாலும், பருவமழை பொய்த்ததாலும் குறுவை இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. 


விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மட்டுமின்றி, அரசு வங்கிகளிலும் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். உரம், பூச்சிகொல்லி தேவையுள்ளது. அதிக விலை வைத்து விற்பனை செய்வதை தடுக்க கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்ய வேண்டும். 


பயிர் காப்பீட்டு திட்டம் தொடக்கத்தில் அரசு தான் செய்து வந்தது. தற்போது, பயிர் காப்பீட்டு திட்டம் தனியாரிடம் கொடுக்கப்பட்டு விட்டது. விவசாயிகளிடம் இருந்து ஏக்கர் கணக்கில் பணத்தை பெற்று கொள்கின்றனர். அதே அளவு அரசிடம் இருந்தும் பணத்தை பெற்று கொள்கிறார்கள். ஆனால், இழப்பீடு வழங்குவது என்பது 100-ல் 2 அல்லது 3 பேரை தவிர மற்றவர்களுக்கு கிடைப்பது இல்லை. 


எனவே, பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். தனியாருக்கு கொடுப்பது மூலமாக விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லை. அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது. 


விஜய் கட்சி துவங்கியதே தி.மு.க. வை பற்றி சாடுவதற்காக தான். இதில் கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை. விஜய் ஏற்கனவே அரைத்த மாவை அரைத்துக்கொண்டு இருக்கிறார். அப்படி அரைத்தால் மாவு தான் வீணாகும். தொடக்கப்பள்ளியை மற்ற பள்ளிகளோடு இணைப்பதை தவிர்க்க வேண்டும். தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும். 


தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க மறுக்கின்றனர். குறிப்பாக, நகை கடன் கூட கொடுப்பதில்லை. அரசு உடனே தலையிட்டு வங்கிகள் மூலமாகவும், நகை வைத்து கடன் கொடுப்பது என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.