தஞ்சாவூர்: இன்று சுதந்திர தினம்... கொடியேற்றி இனிப்புகள் வழங்கி நெஞ்சம் நிமிர்த்தி மரியாதை செலுத்தி விடுமுறைப்பா என்று ஜாலியாக கடந்து செல்லும் நாள் அல்ல. இந்த நாளை நமக்கு பெற்றுத்தந்த சுதந்திர தின போராட்ட தியாகிகளின் ரத்தம் சிந்தியதை நிச்சயம் நினைவுப்படுத்தியே தீர வேண்டும். அவர்களை நினைவு கூருவதே நம் கடமையும் ஆகும்.


இந்திய விடுதலைக்கு லட்சக்கணக்கானோர் எண்ணற்ற தியாகங்களைச் செய்துள்ளனர். இவர்களில் முன்னணி தலைவர்களின் தியாகங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வியர்வையும், ரத்தமும் சிந்திய ஏராளமான பாமர மக்கள் பற்றி இன்னும் தெரியமால் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.


அப்படிப்பட்ட தியாக வாழ்க்கையை வாழ்ந்து மறைந்தவர்தான் கும்பகோணம் பாணாதுறை மேல வீதியைச் சேர்ந்த கே. சோமசுந்தரம் என்கிற சுந்தரம். இவர் கும்பகோணத்தில் 1909, ஜனவரி 21 ஆம் தேதி பிறந்தார். பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த இவர் அக்காலத்தில் குடுமியும் வைத்திருந்தார். இவரது தந்தை குப்புசாமி கும்பகோணத்தில் விடுதலை வேட்கை கொண்ட வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக பணியாற்றினார். தனது தந்தையைப் பார்க்கச் செல்லும் சுந்தரத்திடமும் விடுதலை வேட்கையை ஊட்டினார் அந்த வக்கீல். அதனால், சுந்தரத்துக்கும் விடுதலை வேட்கை உள்ளம் முழுவதும் பரவியது.


விடுதலைக்காகப் போராடும் தலைவர்கள் குறித்த தகவல்களை எல்லாம் சேகரித்து அறிந்து கொண்டார் சுந்தரம். பள்ளிக்குச் செல்லும் வழியில் காசாங்குளக்கரையில் (இப்போது காந்தி பூங்கா) விடுதலைப் போராட்டத் தலைவர்கள் பலர் உரையாற்றுவர். பள்ளிக்குச் செல்வதை விட்டுவிட்டு, கூட்டத்தில் பங்கேற்று தலைவர்களின் உரையைக் கேட்பதை வழக்கமாகக் கொண்டார்.
இதை மறுநாள் பள்ளிக்குச் சென்று சக மாணவர்களிடம் எடுத்துக் கூறி, அவர்களிடமும் விடுதலை வேட்கையை ஏற்படுத்தினார். இரவு நேரத்தில் தெருவில் இருந்த ஒரு மண்ணெண்ணெய் விளக்கின் கீழ் இளைஞர்களை ஒருங்கிணைத்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், அடக்குமுறையைக் கூறி சுதந்திர வேட்கை ஊட்டினார்.


இந்த பிரசார நிகழ்வை ஒரு முறை பார்த்துவிட்ட பிரிட்டிஷ் காவலர்கள் விசாரணை நடத்தி சுந்தரத்தைக் கைது செய்தனர். அப்போது, அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கும்பகோணம் கிளைச் சிறையில் அடைத்தனர். அங்கு 2 நாள்கள் வைத்துவிட்டு, மதுரைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், கேரள மாநிலம், ஆலப்புழா சிறையில் அடைத்தனர். அங்குதான் கம்யூனிஸ்ட் கட்சி முதுபெரும் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான பி. ராமமூர்த்தியின் நட்பு கிடைத்து, வாழ் நாள் முழுவதும் நீடித்தது.


சிறைக்குச் சென்ற பிறகும் கூட, பிரிட்டிஷ் அதிகாரிகளின் அடக்குமுறைக்கு எதிராக பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டார் சுந்தரம். இதனால், இவரை பிரிட்டிஷ் காவலர்கள் கடுமையாகத் தாக்கினர். இதன் காரணமாக சுந்தரத்தின் வலது கை விரல்களில் பலத்த காயமேற்பட்டு, வாழ்நாள் முழுவதும் விரல்களை மடக்க முடியாத அளவுக்குச் செயலிழந்தது. எனவே, வாழ்நாள் முழுவதும் இடது கை உதவியுடன்தான் மிகவும் சிரமப்பட்டு சாப்பிட வேண்டிய நிலைக்கு ஆளானார். இத்தகவலை அவரது மகனும், சமூகச் செயற்பாட்டாளருமான சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தார்.


சிறைவாசத்துக்கு பிறகு வெளியே வந்த இவருக்கு ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட டி.கே. சரஸ்வதி அம்மாளுடன் பெரியோர்கள் முயற்சியால் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து விடுதலைப் போராட்டத் தலைவர்களின் பிரசாரம் எங்கு நடந்தாலும், நண்பர்களுடன் சைக்கிளிலேயே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மதுரை, திண்டுக்கல்லில் காந்தியடிகள் பங்கேற்ற கூட்டத்துக்கு சைக்கிளில் சென்று அவரது உரையைக் கேட்டார். காந்தியடிகள், பாலகங்காதர திலகர் உள்ளிட்ட விடுதலைப் போராட்டத் தலைவர்களின் உரையைக் கேட்பதற்காக எங்கு வேண்டுமானாலும் ஆர்வத்துடன் சென்றார்.


இதனிடையே, விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான மணலி கந்தசாமியை பிரிட்டிஷ் காவல் துறை தீவிரவாதிகள் பட்டியலில் வைத்திருந்தது. தலைமறைவாக இருந்த அவரது தலையைக் கொண்டு வருவோருக்கு அக்காலத்திலேயே ரூ. 1 லட்சம் பரிசு தருவதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. இதையறிந்த சுந்தரம் திருச்சியிலிருந்த மணலி கந்தசாமியை கும்பகோணத்துக்கு ரயிலில் அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது, குடுமி வைத்துள்ள சுந்தரத்துடன் மணலி கந்தசாமி செல்வதாக பிரிட்டிஷ் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து, அதிதீவிரமாகத் தேடினர்.


தங்களைக் காவல் துறையினர் தேடுவதை அறிந்த இருவரும், அவர்களிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் விழிப்புடன் இருந்தனர். தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்துக்கு செல்லும் வழியில் பண்டாரவாடை ரயில் நிலையத்தை ரயில் கடந்தபோது, ஓடும் ரயிலில் இருந்து இருவரும் கீழே குதித்து, வேகமாக ஓடி அருகிலுள்ள வயல்காட்டில் மறைந்து கொண்டனர். பின்னர், இரவு நேரமானதும் மணலி கந்தசாமியை திருவைக்காவூருக்கு சுந்தரம் அழைத்துச் சென்றார். அவ்வூரைச் சேர்ந்த கோ. பிச்சை உதவியுடன் இருவரும் அதே ஊரில் தங்கி, ஆடு, மாடு மேய்ப்பவர்களைப் போன்று காலத்தைக் கடத்தினர்.


பின்னர் இருவரும் அங்கிருந்து நகர்ந்து, கொள்ளிடம் ஆற்றில் தீவு கிராமமான கோவிந்தபுத்தூருக்குச் சென்றனர். அங்கு மரங்கள் நிறைந்த காட்டில் மறைந்து வாழ்ந்து வந்தனர். சுதந்திரமடைந்த பிறகு இருவரும் வெளியில் வந்தனர். எ கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்ந்து இணைந்திருந்து வாழ்நாள் முழுவதும் பாமர மக்களின் உரிமைக்காகப் போராடி வந்தார் சுந்தரம்.  கடைசி வரையிலும் போராட்டக் களத்தைச் சந்தித்து வந்த சுந்தரம் 2000 ஆம் ஆண்டில் தனது 90 ஆவது வயதில் காலமானார்.


இதுபோன்ற சுதந்திர போராட்ட தியாகிகளை பற்றி நாமும், அடுத்து வரும் தலைமுறையும் நிச்சயம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.