தஞ்சாவூர்: சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்து, 411 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 91 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பெண் கலெக்டர் தேசியக் கொடியேற்றுவது இது 2ம் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுதந்திர தின விழாவை ஒட்டி தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடியேற்றி வைத்து, தியாகிகளை கௌரவித்து, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். தஞ்சாவூரில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பெண் கலெக்டர் தேசியக் கொடியேற்றுவது இது 2ம் முறையாகும்.
பின்னர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கும் கதர் ஆடை அணிவித்து கௌரவித்து 411 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 91 இலட்சத்து 27 ஆயிரத்து 490 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ. 1,59,000 மதிப்பிலும், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு நிதி உதவி ரூ. 148,998 மதிப்பிலும், தாட்கோ சார்பில் 303 பயனாளிகளுக்கு ரூ. 1,68,13,800 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 71 பயனாளிகளுக்கு ரூ.4,65,192 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரமும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பாரம்பரிய நெல் விதை வங்கி பாதுகாவலர் விருது மற்றும் விதை வங்கி பராமரிப்பு விருது 1 பயனாளிக்கு ரூ. 3,00,000 மதிப்பிலும், வேளாண் பொறியியல் துறை சார்பில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.9,40,500 மதிப்பிலும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் 20 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழக அரசின் பசுமை விருது மற்றும் ரூ. 1 லட்சம் நிதி 3 பயனாளிக்கு ரூ.3,00,000 மதிப்பிலும் என மொத்தம் 411 பயனாளிகளுக்கு ரூ.191,27,490 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய 215 அரசு அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் ஆதனக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் லிட்டில் ஸ்காலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மனோஜிப்பட்டி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் மகளிர் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளி, மேம்பாலம் குழந்தைகள் நல காப்பகம் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 212 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி , சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், டி.ஜி.பி. ஜியாவுல் ஹக், மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா (தஞ்சாவூர்), பூர்ணிமா (கும்பகோணம்), ஜெயஸ்ரீ (பட்டுக்கோட்டை) மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.