நெல்லின் ஈரப்பதத்தை 21 சதவீதமாக உயர்த்துவது குறித்து இந்திய உணவு கழகத்தின் அனுமதி பெற்ற பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என  உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வீடு அற்றவர்களுக்கான வீடு வழங்கும் திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. இதில் 1168 பயனாளிகளுக்கு 11 கோடியே 59 லட்சத்து 17 ஆயிரத்து 865 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சக்கரபாணி ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், “நெல்லின் ஈரப்பதம் 21% வேண்டும் என விவசாயிகளும் பல அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதேபோன்று சென்ற ஆண்டும் இதே கோரிக்கை வந்தது. இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவெடுக்க முடியாது. இந்திய உணவுக் கழகம் அனுமதி கொடுத்தால் தான் 21% ஈரப்பதத்துடன் நெல்லை வாங்க முடியும். ஆனால் அதற்காக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி அங்குள்ள அதிகாரிகள் இங்கு வந்து பார்த்துவிட்டு ஈரப்பதம் 21% வாங்கலாமா அந்த அளவுக்கு இங்கு மழை பெய்து இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு அவர்கள் டெல்லி சென்று அனுமதி கொடுத்த பிறகுதான் அதை வாங்க முடியும்.





சென்ற ஆண்டும் இதே மாதிரி பிரச்னை வந்த பொழுது முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி அங்குள்ள அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்து விட்டு டெல்லிக்கு சென்ற உடனே 21% வாங்கலாம் என்று அறிவித்தார்கள். அதன் பிறகு நெல்லை வாங்கினோம். இந்தாண்டும் முதலமைச்சரின் மூலம் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி அந்த அதிகாரிகள் இங்கு வந்து பார்த்துவிட்டு சென்று அறிவித்த பிறகு தான் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு சன்ன ரகத்திற்கு 1960 ரூபாய் இருந்ததை இன்றைக்கு 2150 ரூபாய் அளவுக்கும், அதே மாதிரி பொது ரகத்திற்கு அன்று 1945 ரூபாய் இருந்ததை இன்று 2115 ரூபாய்க்கு எடுக்கிறோம்.இன்றைக்கு 17 மாதங்களில் 200 ரூபாய் உயர்த்தி கொடுத்து இருக்கிறோம். தேர்தல் வாக்குறுதிகளில் கூறியதை முதலமைச்சர் 60% நிறைவேற்றி இருக்கிறார். மீதமுள்ளவற்றையும் கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று பல கூட்டங்களில் கூறியிருக்கிறார். எனவே தேர்தல் வாக்குறுதியில் சொன்ன அனைத்தையும் கண்டிப்பாக வரும் காலங்களில் நிறைவேற்றுவோம்.





11 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறோம். குறிப்பாக இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு திருவாரூர் மாவட்டத்திற்கு இரண்டு நவீன அரிசி ஆலை 500 மெட்ரிக் டன்னிலும் மேலும் 800 மெட்ரிக் டன் அறைக்கும் ஒரு அரிசி அலையும் இங்கு வரவிருக்கிறது. அதேபோன்று தஞ்சாவூரிலும் மூன்று நவீன அரிசி ஆலைகள் அமையவிருக்கிறது. அதேபோன்று தமிழகம் முழுவதும் 6600 மெட்ரிக் டன் அரைக்க கூடிய அளவிலே 11 நவீன அரிசி ஆலைகள் தனியார் பங்களிப்புடன் விரைவில் கொண்டுவரப்பட இருக்கிறது. அதேபோன்று திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் 15 நாட்களில் குடும்ப அட்டை தருவோம் என்று கூறினோம். ஆட்சிக்கு வந்து 17 மாதங்களில் இதுவரை தமிழக முழுவதும் 13 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.