தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை பயிர்கள் சாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து விட்டு விட்டு  மழை பெய்தது. இதனால் தீபாவளி பண்டிகை வெடி கொண்டாட்டம் கூட மக்களுக்கு இயல்பாக அமையவில்லை. இந்நிலையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பல இடங்களில் சாரல் மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி, இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு, பேராவூரணி போன்ற பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்ததால், பொதுமக்கள் பெரும்பாலும் அவரவர் வீடுகளில் முடங்கினர்.

Continues below advertisement

இதனால் நகரப் பகுதிகளில் வழக்கத்தைவிட போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று தீபாவளி பண்டிகை என்பதால், நேற்றைய தினத்தை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் செயல்படாததால் பொதுமக்களும் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

அதே போல் தீபாவளி பண்டிகை முடிந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்தவர்கள், அவரவர் பணியாற்றும் இடங்களுக்கும், வசிக்கும் இடங்களுக்கும் இன்று புறப்பட தயாராகினர். இருப்பினும்  அவர்களுக்கு மழை பெரும் இடையூறை ஏற்படுத்தியது. இருந்தாலும் மழையை பொருட்படுத்தாமல் கார், பேருந்து, ரயில்கள் மூலம் மக்கள் புறப்பட்டுச் சென்றனர். இதனால் பேருந்துகளில் அதிகளவில் மக்கள் நெரிசல் காணப்பட்டது.

இதற்கிடையில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்கள் நீரில் மூழ்கியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை சாகுபடிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் நல்ல வன்னியன் குடிகாடு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்கள் முற்றிலும் மழை நீரில் சாய்ந்து மூழ்கி முளைக்க தொடங்கிவிட்டது. இதனால் ஏக்கருக்கு 35 மூட்டைகள் வரவேண்டிய இடத்தில் வெறும் ஐந்து மூட்டைகள் மட்டுமே மகசூல் கிடைப்பதாகவும் இதனால் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைநீர் வடியாமல் உள்ளதால், பயிர்களை இனிமேல் காப்பாற்ற முடியாது. அறுவடை செய்தாலும் தங்களுடைய கை காசை போட்டு தான் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்து அறுவடை செய்து லாபம் பார்க்க வேண்டிய நேரத்தில் இந்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.