தஞ்சை, திருமுருகன் விரிவாக்கம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் புதியதாக கட்டப்பட்டு வசித்து வருகின்றனர். இவர்கள், அந்த நகரிலுள்ளவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லுாரி பிரதான சாலைக்கு வருவதற்கு பாரதி நகரின் வழியாக வந்து செல்கின்றனர். இந்நிலையில், திருமுருகன் நகரிலுள்ள வாரியில் கடந்த 15 ஆண்டுகளாக 4 வீடுகளை சேர்ந்தவர்கள், சாலையை ஆக்கிரமித்து வீடுகளையும்,  சுற்றுசுவரையும் கட்டினர். இதனால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியிலுள்ள சாலை குறுகலானாது. 22 அடி அகலமுள்ள சாலையை ஆக்கிரமிப்பு செய்ததால் 9 அடியாக குறுகலாக்கினர்.



இதனால் திருமுருகன் நகரிலிருந்து, பாரதி நகர் வழியாக தஞ்சைக்கு செல்பவர்கள், மிகவும் குறுகிய சாலையின் வழியாக திருப்பத்தில் செல்லும் போது, எதிரில் வருபவர்கள் தெரியாததால், தினந்தோறும் விபத்துக்கள் நடந்து வந்தது. இதில் சிறுவர்கள்  முதல் முதியவர்கள் ஏராளமானோர் லேசான காயத்துடன் தப்பித்து வருகின்றனர். கார்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், குடிநீர் கொண்டு செல்லும் லாரிகள், குப்பைகள் லாரிகள் குறுகலாக உள்ள சாலையில் செல்ல முடியாமல், வேறு நகருக்குள் புகுந்து திருமுருகன நகருக்குள் வரவேண்டியுள்ளது. இதனால் அவசர தேவைக்களுக்கு கூடசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இது குறித்து ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம், திருமுருகன் நகரிலுள்ள திருவள்ளுவர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கருணாகரன், செயலாளர் அழகிரி, பொருலாளர் தனுஷ்கோடி மற்றும் நிர்வாகிகள், ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றனர். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், சங்க நிர்வாகிகள் தஞ்சை வட்டாட்சியருக்கு புகார் அனுப்பினர். புகாரின் பேரில் வட்டாட்சியர், சர்வேயருக்கு உடனடியாக அப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கான வாரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கீடு செய்ய உத்தரவிட்டார்.



அதன் படி வருவாய்த்துறையினர்,சர்வேயர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் கணக்கீடு செய்த போது,  4 வீட்டை சேர்ந்தவர்கள், சுமார் 4000 சதுரடி ஆக்கிரமிப்பு செய்ததுள்ளது தெரியவந்தது. பின்னர், ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் விளக்கம் அளிக்காமல் கிடப்பில் போட்டனர். இது குறித்து வருவாய்த்துறையினர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர்.


அதன் பிறகு முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை புகாரளித்ததின் பேரில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, உடனடியாக ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பை அகற்றாததால், இன்று காலை, வட்டசார் ஆய்வாளர் ராஜசேகரன், குறு வட்ட அளவர் பாரதிராஜா, கிராம நிர்வாக அலுவலர்கள் தினேஷ், அன்புமுத்துக்குமார், ஹரிப்பிரியா மற்றும் வருவாய்த்துறையினர், அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.