தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விடுதி வார்டன் உள்ளிட்டோர் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் புகார் எழுப்பினர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவியின் தந்தை முருகானந்தம் மனுத் தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் தஞ்சாவூர் மாவட்ட நீதிபதியால் நியமிக்கப்படும் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் பெற்றோர் ஆஜராகி தங்களது வாக்குமூலத்தைத் தெரிவிக்கலாம் என உத்தரவிட்டது. இதன்படி, தஞ்சாவூர் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சி.பாரதி முன்னிலையில் மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா கடந்த மாதம் ஜனவரி மாதம் 23ஆம் தேதி ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
இந்த வாக்கு மூல அறிக்கை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, மாணவி பேசியதாகக் கூறப்படும் வீடியோ பதிவை தஞ்சாவூர் வல்லம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, வீடியோ பதிவு கொண்ட செல்போனை தஞ்சாவூர் வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். பிருந்தாவிடம் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அரியலூர் மாவட்டச் செயலர் பி.முத்துவேல் கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதி ஒப்படைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் வழக்கு பதிந்து மாணவியை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர். ஆனால், விடுதி வார்டன் உள்ளிட்டோர் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் எனப் பெற்றோர் புகார் எழுப்பினர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாணவியின் தந்தை முருகானந்தம் வழக்குத் தொடுத்தார். விசாரணையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி சகாயமேரி மனு தாக்கல் செய்தார். இதன் மீது நடைபெற்ற விசாரணையில் சகாயமேரிக்கு நீதிபதி பி. மதுசூதனன் ஜாமீன் வழங்கினார். இதே போல் பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி மீதும் புகார் எழுப்பப்பட்டு, கைது செய்ய வேண்டும் எனப் பெற்றோர், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து ராக்கேல் மேரிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.