தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அருமலைக்கோட்டை பகுதியில் தாளடி பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்கும் பணிகளில் வெகுவாக மும்முரம் காட்டி வருகின்றனர். கடும் பனியால் பயிர்களில் விளைச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரம் தெளிப்பு பணிகளும் நடந்து வருகிறது.

Continues below advertisement

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடப்பது வழக்கம் மேலும் கரும்பு, வாழை, வெற்றிலை, வெள்ளரிக்காய், உளுந்து, எள், மக்காச்சோளம், பூக்கள் போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மேட்டூர் அணை திறப்பு என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படுவது வழக்கம், ஆனால் நீர் இருப்பு மற்றும் தேவையைப் பொறுத்து தேதி மாறுபடும். உதாரணமாக, 2025-ல் போதுமான நீர் இருந்ததால் ஜூன் 12-ல் திறக்கப்பட்டது.

Continues below advertisement

ஆனால் சில சமயங்களில் மே மாதம் அல்லது தாமதமாகவும் திறக்கப்படும். நீர் திறக்கும் அளவு மற்றும் தேதி குறித்து தமிழக நீர்வளத் துறை அல்லது முதல்வர் அறிவிப்பார்கள். மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி அதிகம் இருக்கும். காலதாமதாமக திறக்கப்பட்டால் சம்பா, தாளடி சாகுபடி அதிகரிக்கும். இந்தாண்டு வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது. அதனால் குறுவை சாகுபடி 1.98 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடந்து சாதனை படைத்தது.

இதையடுத்து சம்பா, தாளடி 3.25 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு கூடுதலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த தொடர்மழையால் சாகுபடி பரப்பளவு எதிர்பார்த்ததை விட குறைந்தது. தற்போது ஆங்காங்கே சம்பா அறுவடை பணிகள் நடந்து வருகிறது. பல இடங்களில் சம்பா நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராகி வருகிறது.

குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது தாளடி சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். இந்த கதிர்கள் பால் பிடிக்கும் தருணத்தில் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயப்பணிகளில் முடக்கம் ஏற்பட்டது. தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததாலும், கடும் பனியினாலும் தாளடி சாகுபடி பயிர்களில் ஆங்காங்கே பூச்சி தாக்குதல் தென்பட்டது. தற்போது மழை பெய்யாத நிலையில் வயல்களில் களைகள் அதிகளவில் மண்டின. இதையடுத்து களைகளை அகற்றும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தது.  

இந்நிலையில் காலை 9 மணியளவிலும் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் அருமலைக்கோட்டை பகுதியில் விவசாயிகள் தாளடி பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்கும் வகையில் பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிப்பான் மூலம் அடித்து வருகின்றனர். இன்னும் 4 வாரத்தில் அறுவடைப்பணிகள் ஆரம்பித்து விடும் என்பதால் விவசாயப்பணிகள் வெகுவாக சுறுசுறுப்படைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கையில், விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனால் பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் நிலையில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் பாதிக்கப்படும் என்பதால் பூச்சி மருந்து அடிக்கும் பணிகளை ஈடுபட்டுள்ளோம். மாலை வேளையில் பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்படக்கூடாது என்பதால் காலை வேளையில் முடிக்க வேண்டும் என்று செய்து கொண்டிருக்கிறோம். மேலும் பயிர்கள் நன்கு செழித்து வளர பல பகுதிகளில் களைப்பறித்தல் மற்றும் உரம் தெளிக்கும் பணிகளும் நடந்து வருகிறது என்றனர்.