தமிழ்நாட்டில், கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டுவந்தது. இந்த சூழலில் இன்று அதிகாலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது.




இதன் காரணமாக மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோவில், குத்தாலம், பூம்புகார், கருவி, வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கன மழை கெட்டி தீர்த்தது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலைய அலுவலகம் செல்லும் வழி முழுவதும் மழைநீர் தேங்கி பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று மயிலாடுதுறை நகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை பொதுப்பணித்துறையினர் விரைவாக  சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மயிலாடுதுறையில் 95 மில்லி மீட்டர், மணல்மேடு 21 மில்லி மீட்டர், சீர்காழி 27 மில்லி மீட்டர், கொள்ளிடம் 14.40 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 95 மில்லிமீட்டர் மழையும், குறைந்த பட்சமாக கொள்ளிடத்தில் 14.40 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது. இந்த மழையானாது தாளடி விவசாயத்திற்கு ஏற்ற மழை என மகிழ்ச்சி தெரிவித்துள்ள நிலையில் மீதமுள்ள 10 சதவீத குறுவை அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மழை தொடர்ந்தால் மீதம் அறுவடை செய்யப் படாமல் உள்ள குறுவை சாகுபடி முற்றிலும் மழை நீரில் சாய்ந்து மூழ்கி வீணாகும் சூழல் ஏற்படும் வேண்டும் விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். 




இந்நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை முன் அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நாளை, வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர்  மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




தமிழகத்தில் நாளை மறுநாள் (23-09-21), டெல்டா மாவட்டங்களிலும் புதுகோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில்  கனமழை பெய்யும் எனவும் கடலோர மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 24ஆம் தேதி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய கனமழை பெய்யும் எனவும்  ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வரும் 25 ஆம் தேதி, கடலோர மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், ஏனைய இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.