தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டிருந்தார். தஞ்சாவூர் மாநகரம் மற்றும் சுற்றுப்பகுதியில் அதிகாலை முதல் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது.
வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தஞ்சை நகர் பகுதிகளில் நேற்று காலை 9 மணி முதல் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
இதே போல் அம்மாபேட்டை, சாலியமங்கலம், பாபநாசம், வல்லம், செங்கிப்பட்டி, கும்பகோணம், அய்யம்பேட்டை, திருவையாறு, கண்டியூர், பள்ளி அக்ரஹாரம் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி நடந்து வருகிறது.
இதில் சம்பா பயிர்கள் 100 நாட்களை கடந்து கதிர் வரும் நிலையில் உள்ளது இந்த மழை இந்த பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் மழை தொடர்ந்தால் பூக்கள் உதிர்ந்து மகசூல் பாதிக்கப்படும் என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.
கடந்த பெஞ்சல் புயலின் போது தஞ்சை மாவட்டம் முழுவதும் பெய்த மழை சம்பா சாகுபடி பயிர்களுக்கு உதவிகரமாக இருந்தது. இருப்பினும் இளம் தாளடி பயிர்கள் மழையில் மூழ்கி சேதம் அடைந்தது. அதேபோல் தற்போது பல பகுதிகளில் தாளடி நாற்று நடும் பணிகள் நடந்து வருகிறது. மழைத் தொடர்ந்தால் இந்த இளம் தாளடி பயிர்களும் சேதம் அடையும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் கனமழை அறிவிப்பால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். அதிகாலை முதல் பெய்து வரும் மழையால் பல கிராமங்களில் மின்தடையும் ஏற்பட்டது_ இதனால் பணிக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தஞ்சையில் நேற்று முதல் பெய்து வரும் மழையால் தாழ்வான மழை நீர் தேங்கியது. மழையின் காரணமாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரம்த்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது