தமிழ்நாட்டை கடந்த 2004ஆம் ஆண்டு தாக்கிய சுனாமியால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். நாகையில் 6,000 பேர்வரை உயிரிழந்தனர். இந்த பேரிடரில் சிக்கி பாதிப்பில் தாயையும், தந்தையையும் ஏராளமான குழந்தைகள் இழந்தனர். அப்போது நாகையில் அரசால் தொடங்கப்பட்ட அன்னை சத்யா இல்லத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த 99 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்கள்.

 

அதில்  9 மாத குழந்தையான சௌமியா, 3 மாத குழந்தையான மீனா ஆகிய பச்சிளம் குழந்தைகளை அப்போதைய நாகை மாவட்ட ஆட்சியராக இருந்தவரும், தற்போதைய தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளராக இருப்பவருமான ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்தார். சென்னைக்கு பணி மாறுதலில் சென்றாலும், ராதாகிருஷ்ணன் மாதா மாதம் நாகை வந்து குழந்தைகளோடு நேரங்களை செலவிட்டு அவர்களுடைய கல்வியில் மட்டுமின்றி, அவர்களுடைய வளர்ச்சிக்கும் அதிக பங்களிப்பை செலுத்திவந்தார்.

 



 

தொடர்ந்து சௌமியா மற்றும் மீனா ஆகியோர் 18 வயதை கடந்த பின்பு நாகை புதிய கடற்கரை சாலையில் வசிக்கும் மலர்விழி மற்றும் மணி வண்ணன் தம்பதியினர் அவர்களை தத்தெடுத்து அவர்களை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் சௌமியா திருமணம் நாகையில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. அனைவரது ஆதரவில் வளர்ந்த தனக்கு, திருமணம் நடந்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள சௌமியா,  தந்தையாக பாதுகாவலராக இருந்து எங்களை வளர்த்தவர் ராதாகிருஷ்ணன் அப்பாதான் என்று மகிழ்ச்சி ததும்ப கூறியுள்ளார் சௌமியா. 

 





 

நாகை ஆஃபிசர்ஸ் கிளப்பில் நடந்த திருமண விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், நாகை எஸ்பி ஜவஹர், நாகையை சேர்ந்த தன்னார்வ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சுனாமி பேரலை பாதிப்புகளை, தான் ஆய்வு செய்ய சென்றபோது பாலத்தின் அருகே அழுதுகொண்டு இருந்த குழந்தைதான் சௌமியா என பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டு பேசிய ராதாகிருஷ்ணன், மனித நேயம் மட்டும்தான் இதுநாள் வரை நிலைத்து நிற்கிறது என்று கூறினார். 

 



குழந்தையாக மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை செய்ததோடு நிறுத்தி விடாமல் வாழ்வின் அடுத்த நிலையான திருமணம் வரை செய்து வைத்து அழகு பார்த்துள்ள தமிழக சுகாதாரத்துறை செயலர்  ராதாகிருஷ்ணன் மற்றும் மலர்விழி, மணிவண்ணன் தம்பதி குடும்பத்திற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண