நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் கடந்த ஜனவரி  மாதம் 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதில் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு தடுப்பூசிகளினால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக சமூக ஊடக தளம் ஒன்று நாடு முழுவதும் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், இந்தியாவில் கோவிஷீல்ட் முதல் தவணை செலுத்திக் கொண்ட 70 சதவீதம் பேருக்கும், கோவேக்ஸின் முதல் தவணை செலுத்திக் கொண்ட 64 சதவீதம் பேருக்கும் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை எனவும், பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் சாதாரண பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது என்றும், அதுபோல கோவிஷீல்ட் இரண்டாம் தவணைத் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 75 சதவீதம் பேருக்கும், கோவேக்ஸின் இரண்டாம் தவணை செலுத்திக் கொண்ட 78 சதவீதம் பேருக்கும் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.  பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் சாதாரண பாதிப்பையே ஏற்படுத்தியிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.




அதேநேரத்தில் கோவிஷீல்ட் முதல் தவணைத் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 30 சதவீதம் பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. அதில் 29 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், ஒரு சதவீதம் பேருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளன. கோவேக்ஸின் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 30 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், அதில் ஒரு சதவீதம் பேருக்கு காய்ச்சல் மட்டுமின்றி தீவிர உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டிருக்கின்றன. எனினும் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.




அதுபோல கோவிஷீல்ட் இரண்டாம் தவணைத் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 20 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், 4 சதவீதம் பேருக்கு தடுப்பூசிக்குப் பின் கொரோனா தொற்றும், ஒரு சதவீதம் பேருக்கு காய்ச்சல் மட்டுமின்றி தீவிர உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டிருக்கின்றன. கோவேக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 17 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், 2 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்றும், 3 சதவீதம் பேருக்கு காய்ச்சல் மட்டுமின்றி தீவிர உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதான முகமது இஸ்மாயில் முனவர்தீன். இவர் கவரிங் நகை கடை நடத்தி வருகிறார். முகமது இஸ்மாயில் முனவர்தீன். கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி மேலச்சாலை கிராமத்தில் அரசுப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாமில் சென்று தடுப்பூசி செலுத்தியுள்ளார். அப்பொழுது தடுப்பூசி செலுத்தியதில் இருந்து உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கை, கால்கள் மறத்துப்போன நிலையில் உடனடியாக மருத்துவரை அணுகி இது தொடர்பாக தெரிவித்துள்ளார். 




தொடர்ந்து அவரை பரிசோதித்த அரசு மருத்துவமனை மருத்துவர் அவருக்கு சிறிய அளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடலில் ரத்த உரைதல் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக 40 யூனிட் ரத்தத்தை சுத்தபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் செய்வதறியாது தவித்து உள்ளார். தொடர்ந்து ரத்தத்தை சுத்த படுத்த ரூபாய் 4 லட்சம் வரை செலவு செய்து உள்ளார். அப்படியிருந்தும் முழுவதுமாக குணமாகமல் தற்போது படுத்த படுக்கையில் உள்ளார். நடக்க முடியாமலும், உணவு உண்ண முடியாமலும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார், அரசு மருத்துவ காப்பீடும் கை கொடுக்காததால் மேல்சிகிச்சை தொடர முடியாமல் கவலை அடைந்துள்ளார். மேலும் இது தொடர்பாக அரசு உரிய விசாரணை செய்து தகுந்த இழப்பீடு வழங்கவூம், மேல் சிகிச்சை செய்ய அரசுக்கு கோரிக்கை  வைத்துள்ளார்.