தஞ்சாவூர்: வங்காள விரிகுடாவில் பெரிய தடுப்பணையை கட்டி, தமிழக அரசு தண்ணீரை வீணாக்குகிறது என்று தஞ்சாவூரில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டினார். 


இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகத்திலும், தமிழகத்திலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. காவிரியில் 40 ஆயிரம் கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 1.25 லட்சம் கன அடி வீதமும் தண்ணீர் விடப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்னும் பலத்த மழை பெய்வதால், வருகிற நாள்களில் நீர் வரத்து அதிகரிக்கும்.


ஆனால், தண்ணீரை கொள்ளிடம் வழியாக கடலில் விட்டு, தி.மு.க., அரசு வங்காள விரிகுடாவில் பெரிய தடுப்பணையை கட்டி, தமிழக அரசு வீணாக்குகிறது. வரும்  20 நாள்களில் மழை நின்ற பிறகு இந்தத் தண்ணீரால் விவசாயிகளுக்கு பயனில்லாமல் போய்விடும்.


தமிழகத்தில்  பொய்களை மக்களிடம் பரப்புகின்ற தி.மு.க., ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் மோசனமான நிலைக்கு சென்று விடும். எனவே,  தி.மு.க., அரசை அரசியலில் இருந்து வேருடன் அகற்ற வேண்டும். கர்நாடகத்துடன் 170 டி.எம்.சி. தருமாறு கூறி சண்டை போட்ட நிலையில், இப்போது கடலில் விட்டு வீணாக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் 900 டி.எம்.சி., அளவுக்கு மழை பெய்கிறது. இதனை தேக்கி வைக்க தமிழக அரசு என்ன செய்து இருக்கிறது.  


தி.மு.க., தலைவர்களின் பேச்சு கேவலமாக உள்ளது. எம்.பி., தயாநிதி மாறன், கனிமொழி பாராளுமன்றத்தில் பொறுப்பற்ற முறையில் பேசுவது சரியில்லாத ஒன்று. தமிழக மக்கள் வரி செலுத்த வேண்டாம் என நாங்கள் கூறினால் என்னாகும் என எம்.பி., தயாநிதி மாறன், கனிமொழி பேசியுள்ளார்கள். அப்படியானால் நீங்கள் செயற்குழுவை கூட்டி சொல்ல வேண்டியது தானே. அப்படி சொன்னால் தி.மு.க.,வும், தமிழக அரசும் இருக்காது. மாநில அரசுக்கு வருமானம் வராது. வெறும் டாஸ்மாக் வருமானம் தான் வரும். 


ஜி.எஸ்.டி.,வரியில் மாநில அரசின் நிதியை மத்திய அரசு ஒரு பைசா கூட எடுத்துக்கொள்ளுவது கிடையாது. முழுவதும் மாநில அரசுக்களுக்கு தான் வருகிறது. மத்திய அரசுக்கு வரும் வரித்தொகையில் தான் தமிழகத்திற்கான தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 


தமிழகத்தில், அமைச்சர் பொன்முடி நிர்வாகத்தில், 292 கல்லுாரிகளில், ஒருவர் 10 கல்லுாரிகளில் பேராசிரியர்களாக உள்ளார். பொன்முடி நடத்தும் ஆசிரியர் பயற்சி கல்லுாரி உட்பட தமிழக பயிற்சி கல்லுாரிகளில் கூட போலி பேராசிரியர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் நிறைந்த ஒருவர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தால் இது தான் நடக்கும். எனவே, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். 


தமிழகத்தில் பொறுப்பற்ற இந்த ஆட்சியை 2026ம் துாக்கி எறிய வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலையில்  பொருளாதாரம் உள்ளது. இதை விட்டு விட்டு மத்திய அரசை குறை சொல்லுவதை நிறுத்த வேண்டும். 


தி.மு.க.,வில் உள்ளவர்கள் இந்து கடவுள்களை பற்றி எது வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்கிறார்கள். இதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இவர்களுக்கு பதில் சொல்ல இந்துக்கள் வீதிக்கு வந்து விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.