தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நடந்து வரும் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 176 ஆவது ஆராதனை விழாவில் நாளை பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் நடக்கிறது.



சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் தியாக பிரம்மம் என்று போற்றப்படுகிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்தார். இங்கே அவரது சமாதி இருக்கிறது.

இங்கே ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தியாகராஜா சுவாமிகளின் 176வது ஆராதனை விழா கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. விழா நாளை 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தாண்டு விழாவை தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கடந்த 6ம் தேதி மாலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி வரை ஏராளமான இசைக் கலைஞர்கள் வாய்ப்பாட்டு மற்றும் இசைக்கருவிகளை இசைத்து சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.





இந்நிலையில் நிறைவு நாளான நாளை புதன்கிழமை பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் நடைபெறவுள்ளது. இந்த விழாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி காலை 7.45 மணிக்கு தொடங்கி வைக்கிறார். ஸ்ரீதியாகபிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் நடைபெறவுள்ள தொடக்க விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொள்கிறார்.

பின்னர், காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாதஸ்வரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பின்னர், 9 மணி முதல் 10 மணி வரை ஏராளமான இசைக் கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியும், இசைத்தும் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தவுள்ளனர். அப்போது, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடக்கிறது.

காலை 10 மணிக்கு நாதஸ்வரம், 10.30 மணிக்கு விசாகா ஹரி குழுவினரின் ஹரி கதை,  11 மணிக்கு தாமல் ராமகிருஷ்ணனின் உபன்யாசம் நிகழ்ச்சிகள் நடக்கிறது. மேலும் நாளை இரவு 10.20 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதனிடையே, இரவு 8 மணிக்கு தியாகராஜ சுவாமிகள் வீதி உலா நடைபெறவுள்ளது.

விழாவில் பங்கேற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சாவூருக்கு இன்று 10ம் தேதி மாலை வருகை புரிகிறார். தஞ்சாவூர் சங்கம் ஓட்டலில் தங்கும் அவர் தொழில், வர்த்தக சங்க பிரதிநிதிகளைச் சந்திக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் நாளை காலை பஞ்சரத்ன கீர்த்தனை வைபவத்தில் பங்கேற்று, சங்கம் ஓட்டலுக்கு திரும்பிய பிறகு விவசாய சங்க பிரதிநிதிகளைச் சந்திக்கிறார். பிற்பகலில் புறப்பட்டு தஞ்சையிலிருந்து திருச்சிக்குச் சென்று விமானம் மூலம் சென்னைக்குச் செல்கிறார்.