தஞ்சாவூர்: நெஞ்சம் ஒரு முறை நீ என்றது... கண்கள் ஒரு நொடி பார் என்றது. ரெண்டு கரங்களும் சேர் என்றது. உள்ளம் உனக்குத்தான் என்றது என்ற காதல் பாட்டை உண்மையாக்கி 10 ஆண்டு பழக்கம் காதலாக மாற, கணவராக்கிக் கொள்ள கடல் கடந்து வந்தார் ஜெர்மன் பெண். விரும்பிய இதயங்கள் இரண்டும் இன்று திருமணம் என்ற பந்தத்தால் ஒன்றானது.
எந்த நாடாக இருந்தால் என்ன கண்கள் மோதிக் கொண்டால் இதயம் உருகிவிடும்தானே. உன் விழியோடு என் மனம் பேசியது வார்த்தைகள் இல்லாத மொழியில். பார்வைகள் நான்கும் இரண்டாய் மாறின. என் உயிர் நிலைத்தது உன் இதயத்தில்... ஓரமாய் நின்றாய் நீ, என் உலகமாய் மாறினாய் நீ. இந்த உலகத்தில் மொழியோ, இனமோ தடை போட முடியாத ஒன்றுதானே காதல்.
கண்ணின் வழி வந்த காதல், மொழியில்லாமல் இதயத்தில் சேகரமாகிய அழகிய கவிதைதானே. இதழ்கள்தான் பேச வேண்டுமோ? பார்க்கும் விழிகள் பல மொழி கூறிடுமே நாள், வாரம், மாதம், வருடம் முழுதும் உன் நினைவோடு வாழ உன் பார்வை ஒன்றே போதுமே கண்ணே. எங்கிருந்தாலும் இதயமும், கண்களும் தேடும் உன்னையே என்று காதலின் பரிமாணம் உலகை விட பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது.
அந்த வகையில் பணியாற்றும் இடத்தில் பார்வையை பரிமாறி, காதல் என்னும் கடலில் கவிழ்ந்த கப்பலால் இரு இதயங்கள் திக்குமுக்காடிய தருணம் கடந்து, குடும்ப வாழ்க்கையில் கணவன், மனைவியால் இன்று காலை கரம் சேர்ந்த இனிய நொடிகள் மறக்க முடியாத ஒன்றல்லவா.
ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் விலினா பெர்கன். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே கூனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். குஷி திரைப்படத்தில் கூறுவது போல் பிறந்தது என்னவே வெவ்வேறு நாட்டில். இணைந்தது என்னவோ தமிழ்நாட்டில். தஞ்சையிலிருந்து ஜெர்மனி நாட்டில் உள்ள ஐ.டி., கம்பெனிக்கு வேலைக்கு சென்றார் விக்னேஸ்வரன். அதே நிறுவனத்தில் பணியாற்றினார் விலினா பெர்கன். இருவரும் அந்த ஐ.டி கம்பெனியில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்த இருவரின் கண்களும் மோதிக் கொள்ள காதல் வலையில் சிக்கினர்.
மௌனத்தில் கூட நாம் பேசிக்கொள்கிறோம், அமைதியே நம் காதலின் மொழியானதே. ஒரு பார்வை போதும் உன்னை நானும், என்னை நீயும் புரிந்து கொள்வதற்கு, மனங்கள் ஒன்றாக தாலாட்டு இசைக்கும் என்று வலுப்பட்ட காதல் இரும்பு போல் மாறியது. இதனையடுத்து இருவரது பெற்றோரிடம் தங்களின் விருப்பத்தை கூறி உள்ளனர். தங்கள் பிள்ளைகளின் சந்தோஷமே எங்களுக்கு முக்கியம் என்று மதமோ, இனமோ, நாடோ முக்கியமல்லை என்று பெற்றோர்கள் பச்சைக் கொடி காட்ட காதலனாக பார்த்தவரை கணவராக்கிக் கொள்ள குடும்பத்தினருடன் கடல் கடந்து வந்தது அந்த அழகிய புறா.
தொடர்ந்து இன்று காலை விக்னேஷ்வரனுக்கும், விலினாபெர்கனுக்கும் வெளிநாட்டு, உள்நாட்டு நண்பர்கள்,உறவினர்கள் வாழ்த்துக்களுடன் தஞ்சாவூரில் தமிழ் முறைப்படி பிரமாண்டமாக திருமணம் நடந்தது. பாரம்பரிய முறைப்படி ஜெர்மன் நாட்டை சேர்ந்த தன் காதலி நடந்து வந்த அழகை கண்டு தமிழ் மகனாம் விக்னேஸ்வரன் பார்த்து மயங்கியதும் கண்கொள்ளா காட்சிதான். மணமகள் விலினாபெர்கன் பட்டுசேலை அணிந்து, நம்நாட்டு பாரம்பரிய முறைப்படி திருமண நிகழ்வில் கலந்து கொண்டார்.
நாதஸ்வரம் இனிய இசையை முழங்க தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமக்களை உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அவர்களின் நண்பர்கள் வந்திருந்து வாழ்த்தியது மற்றொரு சிறப்பு.