தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த செட்டிமண்டபம் புறவழிசாலையில் குப்பைகளை கொளுத்தப்பட்டதால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டுனர் கடுமையாக அவதியடைந்தனர். வாகனங்களில் சென்ற முதியவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
கழிவுப்பொருட்கள், குப்பைகள் குவிந்து கிடக்கிறது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செட்டிமண்டபம் பகுதியில் இருந்து சென்னை பைபாஸ் சாலைக்கு செல்லும் புறவழிச்சாலையில் காவிரி ஆறு உள்ளது. இந்த ஆற்றின் கரையின் அருகே ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலையின் வழியாக தினமும் இருசக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் இந்த வழியாக சென்று வருகிறனர் இந்த பகுதியில் சாலையோரத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்து கொண்டு வந்து குப்பைகளை கொட்டி செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பல்வேறு வகையான கழிவுப் பொருட்கள் குவிந்து கிடக்கிறது.
அடிக்கடி கொளுத்தப்படும் குப்பைகள்
இவ்வாறு குவிந்து காணப்படும் குப்பைகள் தற்போது ஆடிக்காற்றில் அலேக்காக பறந்து சாலைகளிலும், வாகனங்களில் செல்வோர் மீதும் வந்து விழுகிறது. இதனால் ஒரு சிலர் சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அவ்வப்போது தீயிட்டு கொளுத்துகின்றனர். இதனால் அந்த சாலையில் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. அடிக்கடி இது போன்று அருகருகே குப்பைகளை குவித்து வைத்து கொளுத்துவதால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவு புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் இந்த இடத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை மீண்டும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறியது. சாலையே தெரியாத அளவிற்கு புகை சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் வாகனங்கள் மிகவும் மெதுவாக ஓட்டிச் செல்லும் நிலை ஏற்பட்டது. வாகனங்களில் வந்த முதியவர்களுக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. சிலர் கண் எரிச்சல், மூச்சு திணறல் காரணமாக இறங்கி நின்று விட்டு புகை கலைந்த பின்னர் சென்றனர். புகை மூட்டம் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் குப்பைகளை ஆங்காங்கே கொட்டும் வகையில் குப்பைத்தொட்டிகள் வைப்பதோடு, அவற்றை அவ்வப்போது அகற்றி சுகாதாரமாக இருக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.