தமிழகத்தில் வரும் பத்தாம் தேதி இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி(Ganesh Chaturthi) விழா கொண்டாடப்படவுள்ளது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின் போது கோயில்களிலும் பொது இடங்களிலும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு பின்னர் அவற்றை நீர்நிலைகளில் கரைத்து இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு கோயில்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபடவும், ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழ்நாடு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 




அதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த சட்டநாதர் கோயில் ஆலயத்தின் வாயிலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆபத்து காத்த விநாயகர் கோயில் எதிரே இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் மாநில செயலாளர் கொள்ளிடம் சுவாமிநாதன்  தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளார். அக்கட்சியைச் நிர்வாகிகள், திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை மாநில செயலாளர் அழகிரிசாமி  ஆகியோர் முன்னிலையில் சுவாமிநாதன் தனிநபராக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.




‛‛தியேட்டர்களை திறக்க அனுமதிக்கும் அரசு, விநாயகர் சிலை வழிபாட்டுக்கு தடை விதிப்பது நியாயமில்லை ஒன்று. கட்டுப்பாட்டுடன் சிலை வைத்து, பூஜை செய்து, கடலில் கரைக்க அனுமதிக்க வேண்டும். சிலையுடன், பொதுமக்கள் செல்லும் எண்ணிக்கையை காவல்துறையினர் தீர்மானிக்கலாம். பஜனை பாட, அன்னதானம், சுண்டல் வழங்க தடை விதிக்கலாம். கூட்டம் கூட அனுமதிக்க மாட்டோம் என, சிலை வைப்பவர்களிடம் எழுதி வாங்கலாம். காவல்துறையினர் கண்காணிப்பை அதிகரித்து, சிலை வைக்க அனுமதிக்க வேண்டும்,’’ என்ற கருத்தை அவருக்க ஆதரவாக அங்கு திரண்டு வருவோர் கருத்து தெரிவிக்கின்றனர். 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


மேலும் சிலர் கூறுகையில், ‛‛கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கும், கோயில்கள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்ய தடை விதித்திருப்பது இந்த இக்கட்டான சூழலில் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடியது ஆகும். பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும் விநாயகர் ஊர்வலத்தில் நாம் எப்போதும் கூட்டத்தை காண முடிகிறது. இதனால் கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் இருப்பதால் இதனை புரிந்து கொண்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே விநாயகரை பிரதிஷ்டை செய்து அதனை நீர்நிலைகளில் கரைத்து வழிபட வேண்டுமென்றும்,’’ மற்றொரு தரப்பு கருத்து தெரிவித்தனர்.