தஞ்சாவூர்: கொட்டும் மழையிலும் 2வது நாளாக தஞ்சை பூச்சந்தையில் பூக்களின் விலை உயர்ந்து விற்பனையானது. கார்த்திகை தீப திருநாள் என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.2000க்கு விற்பனை செய்யப்பட்டது.
தஞ்சை விளார் சாலை மற்றும் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் பூச்சந்தை அமைந்துள்ளது. தஞ்சையில் உள்ள இந்த பூச்சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வேதாரண்யம், திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் தினமும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இதேபோல் தஞ்சையில் இருந்து மன்னார்குடி, நீடாமங்கலம், அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.
பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். இதேபோல மழை காலக்கட்டத்திலும், பனிக்காலத்திலும் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்படுவதால் தஞ்சைக்கு வரும் பூக்களின் வரத்து குறைவாக இருக்கும். இதன் காரணமாகவும் பூக்கள் விலை உயர்ந்து காணப்படும். இந்நிலையில் இன்று கார்த்திகை தீப திருநாள் உற்சாகமாக கொண்டாப்பட்டு வருகிறது. மாலையில் மக்கள் தங்களின் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவர்.
இதையொட்டி தஞ்சை மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. பூக்களின் விலை 2 மடங்கு அளவுக்கு உயர்ந்து காணப்பட்டாலும் கொட்டும் மழையிலும் மக்கள் அதிகளவில் வந்து வாங்கி சென்றனர். இதனால் பூ மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விலை உயர்வு காரணமாக தஞ்சை பூ மார்க்கெட்டில் நேற்று ரூ.700 விற்கப்பட்ட மல்லிகைப்பூ இன்று ரூ.2000-க்கு விற்கப்பட்டது. அதேபோல் ரூ.700 விற்கப்பட்ட முல்லைப்பூ ரூ.1500-க்கும், ரூ.700-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ.1500-க்கும், ரூ.120-க்கு விற்கப்பட்ட செவ்வந்தி ரூ.400-க்கும், ரூ.50-க்கு விற்கப்பட்ட செண்டிப்பூ ரூ.100-க்கும், ரூ.100-க்கு விற்பனையான சம்பங்கி ரூ.250-க்கும், ரூ.120-க்கு விற்பனையான ஆப்பிள் ரோஸ் ரூ.400க்கும், அரளி ரூ.600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மழையின் காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. அதேபோல் தற்போது பனி காலம் என்பதால் பூக்கள் பூத்து செடிகளில் அழுகி வருகிறது. இதனால் மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து வழக்கத்தைவிட குறைவாக இருக்கிறது. இதன் காரணமாகவும், கார்த்திகை தீப திருநாள் காரணமாகவும் பூக்களின் விலை 2 மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது. மழை, பனிக்காலம் முடிந்த பிறகு தான் பூக்கள் வரத்து அதிகம் இருக்கும். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் பூக்களின் தேவை அதிகம் இருக்கும். விலையும் அதிகம் இருக்கும். விலை உயர்ந்து இருந்தாலும் மக்கள் அதிக அளவில் வந்து பூக்களை வாங்கி சென்றனர்.
பூக்களின் விலை இன்னும் உயரும் என்ன பூ வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், தஞ்சையில் இன்று காலை முதல் மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது. இருப்பினும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் சந்தைக்கு வந்து பூக்களை வாங்கி சென்றனர். விலை அதிகம் என்றபோதிலும் அதை பொருட்படுத்தவில்லை என்றனர். இதேபோல் கார்த்திகை பொரி விற்பனையும் மும்முரமாக நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கார்த்திகை அகல் விளக்குகள் விற்பனை மழையின் காரணமாக மந்தமாக நடந்தது. நேற்று அதிகம் விற்பனையான நிலையில் இன்று குறைவாகவே விற்றது என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.