நாகை மாவட்டம் நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தளமான நாகூர் தர்காவை 8 பேர் கொண்ட பரம்பரை அறங்காவலர்கள் குழு நூற்றாண்டுகளாக நிர்வகித்து வந்தனர். இந்த நிலையில் 8 அறங்காவலர்களில் ஒருவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த காரணத்தால், மற்ற நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட பணி போர் காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி தர்கா நிர்வாகத்தை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் மற்றும் நீதிபதி ஆகிய இருவர் நிர்வகித்து வந்தனர். இந்த நிலையில் ஊழல் புகாரால் இடைக்கால நிர்வாகிகளை நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாகிகள் சில மாதங்கள் தர்கா நிர்வாகத்தை நடத்தி வந்தனர்.



 

அதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு நாகூர் தர்கா நிர்வாகத்தை பாரம்பரிய முறைப்படி அறங்காவலர்கள் நிர்வகிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து 11 அறங்காவலர்களை நீதிமன்றம் நியமித்த நிலையில், 8 பரம்பரை அறங்காவலர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டு, மூத்த அறங்காவலர் தேர்வு இன்று நாகூர் தர்காவில் நடைபெற்றது.  அப்போது, நாகூர் தர்கா தலைமை அறங்காவலாராக , நாகூர் ஆண்டவரின் 10ம் தலைமுறையாக செய்யது காமில் சாஹிப் தேர்வு செய்யப்பட்டார்.

 



 

அவருக்கு அறங்காவலர்கள், சாஹிபுமார்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா பாரம்பரிய முறைப்படி அறங்காவலர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தலைமை அறங்காவலர் பதவிக்கு எதிர்த்து போட்டியிட்ட மஸ்தான் கலீஃபா சாஹிப் புதிய தலைமை அறங்காவலர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 



முடிகொண்டான் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களின் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் - எதிர்ப்பு தெரிவித்து   கிராம மக்கள்  மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

 

நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் வசிக்கும் மக்களை நீதிமன்ற உத்தரவுப்படி காலி செய்யும் பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் கிராமத்தில்  முடிகொண்டான் ஆற்றங்கரை அருகே வசிக்கும் 250 வீடுகளை 21 நாட்களில் காலி செய்ய பாசன பிரிவு உதவி பொறியாளர் உத்தரவிட்டு நோட்டீஸ் ஒட்டியுள்ளார். இந்த நிலையில் மாற்று இடம் வழங்க வேண்டியும், வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க கோரியும் கிராம மக்கள் ஆதலையூர் பகுதியில் அண்மையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் முடிகொண்டான் ஆற்றங்கரை அருகே வசிக்கும் 250 வீடுகள் வீடுகளைச் சேர்ந்தோர் நாகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க திரண்டனர்.

 



 

100 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் தங்களை காலி செய்ய அரசு அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாகவும், பல லட்சம் ரூபாய் செலவிட்டு கட்டிய கான்கிரீட் வீடுகள் கட்டியிருப்பதாகவும்,குடிநீர் வரி, சொத்து வரி, மின்சார கட்டணம் என அனைத்தும் செலுத்தி வருவதாக மனுவில்  குறிப்பிடப்பட்டுள்ள கிராம மக்கள், வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி மாற்று இடத்தில் வீடுகளை கட்டித்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் முன் வைத்துள்ளனர். ஒரே நேரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க கிராம  மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.