அமைச்சரவை எவ்வளவு முக்கியமோ அதே போல் ஒரு அரசுக்கு அதிகாரிகளும் முக்கியம். அந்த வகையில் தமிழக அரசு நியமனம் செய்த அதிகாரிகள் செயல்படுதலில் வல்லவர்கள் என பலராலும் பாராட்டப்பட்டவர்கள். குறிப்பாக தலைமைச் செயலாளர் தொடங்கி மாநில வளார்ச்சி கொள்கை குழு வரை இடம்பெற்றிருக்கும் அதிகாரிகள் பல்வேறு காலங்களில் பல்வேறு முதலமைச்சர்கள் கீழ் சிறப்பாக செயல்பட்டவர்கள். அப்படி முதலமைச்சர் ஸ்டாலின் தேர்வு செய்துள்ள முக்கிய அதிகாரிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். 


தலைமைச் செயலாளர் இறையன்பு 


செயல்பாடுகளால் சிலிர்க்க வைப்பவர், எந்த துறையானாலும் முதன்மை இடத்துக்கு கொண்டு வர உழைப்பவர். பெரிய பதவிகள் இல்லாத காலத்திலும் தொடர்ந்து செயல்பட்டவர். மாணவர்களை அடிக்கடி சந்தித்து உற்சாகம் ஊட்டுபவர் என பன்முகம் இவருக்கு உண்டு. அதனால்தான் அவரை விட மூத்தோர் பலர் இருந்தும் தலைமைச் செயலாளர் பதவிக்கு இறையன்புவை தேர்வு செய்தார் முதலைமைச்சர் ஸ்டாலின் என்கிறார்கள். 




முதன்மை செயலாளர் அணி 


முதலமைச்சருக்கான செயலாளர் பணியில் மொத்தம் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளார். அதில் 4 பேருமே கட் அண்ட் ரைட் அதிகாரிகள் என சொல்லப்படுபவர்கள். எந்த வேலையையும் படு அமைதியாக முடிக்கும் சாகசப் பறவைகள். நால்வரில் முதன்மையானவர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். மாவட்ட ஆட்சியர், தேர்வாணைய செயலர், தொல்பொருள் பிரிவு என பல பிரிவுகளில் பணியாற்றியவர். உமாநாத் ஐ.ஏ.எஸ், அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ், சண்முகம் ஐ.ஏ.எஸ். ஆகிய அடுத்த மூவரும் கூட தத்தம் துறைகளில் பயங்கர ஸ்டிரிக்ட் அதோடு கறாராக இருந்ததற்காக பந்தாடப்பட்டவர்கள். 


ஐபிஎஸ் அணி 


சென்னை கமிஷனர் தொடங்கி சரக டி.ஐ.ஜி வரை நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் லிஸ்ட் தமிழ்நாட்டில் பெருசு. அதோடு எஸ்.பி. பணியிட மாற்றங்களும் கூட தினமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள ஷங்கர் ஜிவால். காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் குறிப்பாக சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரிவுகளில் ஷங்கர் ஜிவாலின் பணி பெரியது. சென்னையின் அமைதி அவசியம் என்பதால் ஜிவாலுக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார் ஸ்டாலின். அதோடு டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் கடந்த சில ஆண்டுகளாக பெரிய பொறுப்புகளில் இல்லை. ஆனால் திறமையான அதிகாரி. அதோடு தாமரைக் கண்ணன், கந்தசாமி ஐபிஎஸ், அமல்ராஜ், வருண்குமார், தினகரன் போன்றோருக்கும் முக்கிய இடங்களில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 




நம்பிக்கை அதிகாரிகள் 


ககன் தீப் சிங் பேடி எனும் பேரிடரை சமாளிக்கும் ஜாம்பவான். வெளிப்படை தன்மையோடு செயல்படும் இந்த அதிகாரிக்கு சென்னை மாநகராட்சி ஆணையராக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் எளிமையான அதிகாரி என பெயர் வாங்கிய ஷில்பா பிரபாகரை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக்கியுள்ளார் முதல்வர். இவர்களோடு ஆனந்தகுமார். தற்போதைய நுகர்பொருள் பாதுகாப்பு துறை ஆணையர். ஊழல் மலிந்த துறை என இருந்த குற்றச்சாட்டுகளை களைய இவரை பயன்படுத்துவதே திட்டம் என சொல்லப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை ஆணையராகியுள்ள நந்தகுமார் மீதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் தரேஸ் அகமது. ஆக்டிவான ஒரு அதிகாரி. எதிலும் மக்கள் ஒத்துழைப்பை கொண்டு வருவதில் திறமைசாலி.




அனுபவசாலிகள் அணி 


மாநில கொள்கை வளர்ச்சி குழுவில் இடம்பெற்றுள்ள பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், மருத்துவர் அமலோற்பவநாதன், பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் விஜயபாஸ்கர், முனிவர் நர்த்தகி நட்ராஜ் உள்ளிட்டோர் உள்ளனர். பல்வேறு துறைகளில் அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட இவர்கள் தமிழக வளர்ச்சிக்கான திட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர்