தமிழகத்தில் நாகை, கடலூர்,ராமநாதபுரம், ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.  நாகை மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கிழக்கு கடலோர மாவட்டங்களில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று  அதிகாலை முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது.  நாகை மாவட்டத்தில் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர்,கல்லார், செருதூர், நாகூர், வேதாரண்யம், கோடியக்கரை, புஷ்பவனம், ஆற்காட்டுதுறை, வெள்ளப்பள்ளம், விழுந்தமாவடி உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் விசைப் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 



 

இதனால் நாள் ஒன்றுக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிப்பு ஏற்படும். மீனவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், டீசல் பாய், வாகன ஓட்டுனர்கள், மீன் வெட்டும் தொழிலாளர்கள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை இழப்பு ஏற்படும். வரும் ஜூன் மாதம் 14ம் தேதி நள்ளிரவு தடைக்காலம் நிறைவு பெறும் வரை 61 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருக்கும் காலங்களில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை சீரமைத்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடுவார்கள்.இன்று முதல் ஜீன் மாதம் -14ம் தேதி வரை மொத்தம் 61 நாட்களுக்கு பாரம்பரிய மீன்பிடி கலன்கள் அதாவது (கட்டுமரம், பைபர் படகு) தவிர விசைப்படகுகள் மற்றம் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

 



 

விசைப்படகுகள், இழுவலைப்படகுகள் கொண்டு மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள் அப்படகில் உள்ள மீனவர்களுக்கு தொலை தொடர்பு கருவிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். இந்த அறிவிப்பினை மீறி மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

 



 

அரசின் உத்தரவை ஏற்று படகுகள் கரை திரும்பிய நிலையில் படகில் உள்ள வளைகள் மீன்பிடித்தொழில் சாதனங்கள் உள்ளிட்டவைகளை படகில் இருந்து வாகனங்களில் ஏற்றி பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் அதேசமயம் தடைக்கால நிவாரண தொகை உயர்த்தி பத்தாயிரம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.