தஞ்சாவூர்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள் மத்திய அரசின் நிலக்கரி திட்டத்துக்கான ஏல அறிவிப்புக்கு தமிழ்நாடு விவசாயிகள் மாநிலப் பொதுச் செயலர் சாமி. நடராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஆசியாவின் மிகப்பெரிய நீண்ட சமவெளி பரப்பான காவிரி படுகை மாவட்டங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்ததைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கூட்டுப் போராட்டங்கள் நடத்தின.

இந்தத் தொடர் போராட்டத்தின் விளைவாக காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 29 ஆம் தேதி மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் நிலக்கரி எடுப்பு திட்டத்தின் 17/7வது பகுதியாக நாடு முழுவதும் 101 இடங்களில் நிலக்கரி மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் எடுக்க அழைப்பாணை விடுக்கப்பட்டு உள்ளது.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் உள்ள மைக்கேல்பட்டி நிலக்கரி பகுதி மற்றும் கடலூர் மாவட்டம் கிழக்கு சேத்தியாதோப்பு நிலக்கரி பகுதி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கிய வடசேரி நிலக்கரி பகுதி ஆகியவை தமிழ்நாட்டில் உள்ளடக்கிய பகுதிகள். ஏலத்துக்கு விண்ணப்பிக்க மே 30 கடைசி நாளாகவும், ஜூலை 14 ஆம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் தேதியாகவும் மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. எந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்படாது என தமிழ்நாடு அரசு சட்டம் கூறுகிறது. மேலும், 2015 ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்த நிரந்தர தடையும் அமலில் உள்ளது.

நிலவளம், நீர்வளம், முப்போகம் விளையக்கூடிய விளைநிலங்களைக் கொண்ட பகுதிகளான வடசேரி நிலக்கரி பகுதி முழுவதும், சேத்தியாதோப்பு கிழக்கு நிலக்கரி பகுதி ஒரு பகுதியும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிக்குள் வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முக்கியத்துவமும் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டிய சூழலில் பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டல பகுதிக்குள் இந்த ஏல அறிவிப்பு என்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

மாநில அரசின் எவ்வித அனுமதியும் இல்லாமல் மத்திய அரசின் இத்தகைய அறிவிப்பு மாநில உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். எனவே, மத்திய அரசின் இதுபோன்ற திட்டங்களை எந்த வகையிலும் அமல்படுத்த மாட்டோம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். மத்திய அரசு இத்தகைய அறிவிப்பினை உடனே திரும்ப பெற வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்த மத்திய பாஜக அரசு செயல்படுத்த நினைத்தால் அதற்கு எதிராக விவசாயிகளையும், பொதுமக்களையும் திரட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.