காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு சம்பா சாகுபடி பணியில் அதிக அளவில் விவசாயிகள் ஈடுபட்டு வந்த நிலையில் இயற்கை சீற்றத்தின் காரணமாக சம்பா பயிர்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்தன. விவசாயிகள் முன்னதாகவே தங்களது பயிர்களுக்கு காப்பீடு செய்து வைத்திருந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் இதுவரை பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு என்பது வழங்கப்படாமல் இருக்கிறது. இதனை வலியுறுத்தி தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் அதேபோன்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை மனுக்களை அளித்து வந்தனர். ஆனால் இதுவரை விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை எனக்கூறி தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் அறிவுறுத்தலின் பேரில்  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

குறுவை நெல் கொள்முதல் தங்குதடையின்றி நடைபெறுவதற்கு சென்றாண்டு செயல்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்துவைக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மேலும் 22 சதவிகிதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு விரைந்து அனுமதி பெற்று விவசாயிகள் நெல் மணிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கூட்டுறவு வங்கிகள் கடன் கொடுப்பதற்கு விதிக்கும் நிபந்தனைகளை திரும்பப் பெற வேண்டும் பழைய நடைமுறையை பின்பற்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாய பணியில் ஈடுபடும் அனைத்து சிறு குறு விவசாயிகளுக்கும் நிபந்தனையின்றி கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



 

ரபி பருவத்திற்கான சிட்டா அடங்கல் வழங்கி காப்பீடு செய்வதையும் கடன் வழங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஒரே மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் வேளாண் அலுவலர்களை பணி இடமாற்றம் செய்து வெளிப்படையான நிர்வாகத்தை அமல்படுத்த வேண்டும், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள அறநிலையத்துறை சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து  மீட்புக்கான குண்டர் சட்ட மசோதா மூலம் குத்தகை விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சுப்பையன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க திருவாரூர் ஒன்றிய செயலாளர்  அகஸ்டின் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.