தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.


தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. விவசாயி நாக. முருகேசன் தலைமை வகித்தார். இதில் நிறைவேற்றபபட்ட தீர்மானங்கள் வருமாறு:- கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகள் பெயரில் வாங்கிய வங்கி கடன் மற்றும் விவசாயிகளின் கரும்பு கிரயத்தில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனுக்காக பிடித்தம் செய்து வங்கிக்கு அனுப்பாமல் உள்ள கடன் தொகை முழுவதையும் தீர்த்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.


விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் கரும்பு கிரயத்தொகை மற்றும் தமிழக அரசு அறிவித்த கரும்பு பணம், வாகன வாடகை, வெட்டுக்கூலி, முழுவதையும் வட்டியுடன் சேர்த்து ஒரே தவணையில் அளிக்க வேண்டும். இல்லாவிடில் ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30-ந் தேதி தனியார் சர்க்கரை ஆலை முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது.


சர்க்கரை ஆலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினால் அதை விவசாயிகள் முன்னிலையில் நடத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.




மாணவர்களின் அறிவியல் கண்காட்சி:


கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தானில் உள்ள விஸ்வ வித்யாலயாவில் வேத பாடசாலை மாணவா்களின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.




கண்காட்சி அரங்கத்தை ஸ்தாபகா் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் திறந்து வைத்து பேசுகையில்,  வேதம் என்ற சொல்லின் பொருளே அறிவு. நமது பழைமையான புத்தகம் என்றால் அது வேதம்தான். நமது தேசத்தில் 1, 134 வேத சாகைகள் (பிரிவுகள்) இருந்துள்ளன. தற்போது 12 சாகைகள்தான் உள்ளன.


இந்தியாவில் உள்ள 22 மாநிலங்களில் இந்த 12 சாகைகள் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. நாட்டிலுள்ள அத்தனை சாகைகளும் ஒன்று சோ்ந்து இருக்க வேண்டும் என்ற முனைப்போடு கோவிந்தபுரத்தில் விஸ்வ வித்யாலயா வேத பாடசாலை தொடங்கப்பட்டுள்ளது.




இங்கு பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் வேதம், சாஸ்திரம், புராணங்கள், நாம ஜபத்துடன் நவீன கல்வியறிவும் பெறுகின்றனா். தற்போது கணிதம், அறிவியல் சாா்ந்து தங்களது படைப்புகளைக் கண்காட்சிகளாக வைத்துள்ளது சிறப்புக்குரியது என்றாா்


பின்னா், அறிவியல் கண்காட்சியில் மாணவா்களின் படைப்புகளை கும்பகோணம் கோட்டாட்சியா் பூா்ணிமா, திருவிடைமருதூா் வட்டாட்சியா் சுசீலா ஆகியோர் பாா்வையிட்டனா்.


இதில் அறங்காவலா் கிருஷ்ணமூா்த்தி, நெரூா் டாக்டா் ரமண சா்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளி முதல்வா் மகாலட்சுமி வரவேற்றாா். பேராசிரியை வேங்கடலட்சுமி நன்றி கூறினாா்.