திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்.

 

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி, என 3 போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினால், குறுவை மற்றும் தாளடி சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்ளவில்லை. மேலும் ஒருபோக சாகுபடி ஆன சம்பா சாகுபடி பணிகளை மற்றும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் பல ஆண்டுகளுக்குப் பிறகு குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பணிகள் நடைபெறும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் தமிழ்நாடு அரசு நிர்ணயித்த இலக்கை விட, திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. இது எந்த ஆண்டிலும் இல்லாத அளவில் இந்த ஆண்டு அதிகபட்சமாக குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 70 சதவிகிதம் விவசாயிகள் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பி விவசாயப் பணிகளில் ஈடுபட்டு உள்ளார்கள். மேலும் 30 சதவீத விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளை நம்பி விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.



தற்பொழுது குறுவை அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. ஆள்துளை கிணறு மூலமாக சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது குறுவை நெல் பயிர்களை அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். மேலும் ஒரு சில தினங்களில் மேட்டூர் அணையை நம்பி சாகுபடி பணியில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களது குறுவை நெல் பயிர்களை அறுவடை பணிகளை தொடங்க உள்ள இருக்கிறார்கள். அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் 69 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால் விவசாயிகளுக்கு கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். 



திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. ஆகையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகமாக திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். விவசாயிகளிடமிருந்து பணம் பெறும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளிடமிருந்து கையூட்டு பெறாமல் விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு வைத்துள்ளனர்.