அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி. குடிநீர் கழிவு நீராக வருவதாக குற்றச்சாட்டு

 

திருவாரூர் மாவட்டம் குளிக்கரை அருகே உள்ள ஒட்டகுடியில் தனியார் அரிசி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அரிசியாக அரைத்து அரசுக்கு வழங்கும் ஒப்பந்தத்தையும் பெற்று இந்த அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. அரிசி ஆலை அமைந்துள்ள பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் வரும் தண்ணீர் அனைத்தும் மஞ்சள் நிறத்திலும் பச்சை நிறத்தில் உள்ளது. அடிப்படைக்காரணம் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றாமல் அறைக்குள்ளேயே திறந்து விடுவதால் நிலத்துக்குள் அந்தக் கழிவு தண்ணீர் புகுந்து அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்தை மாசுபடுத்தி விட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



 

மேலும் இந்த தண்ணீரை தான் அப்பகுதி மக்கள் பள்ளி குழந்தைகள் உட்பட அனைவரும் குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர். இந்த குடிநீரை குடிப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும்  என்ற அச்சத்துடன் தினந்தோறும் இந்த தண்ணீரை குடித்து வருகிறோம். மேலும் ஊராட்சி குடிநீர் காலை ஒரு மணி நேரம் மட்டுமே வருவதால் அந்த தண்ணீர் போதுமான அளவு இல்லாத காரணத்தினால் இந்த தண்ணீரைப் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் அரிசி ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் விவசாய நிலங்களில் நேரடியாக விடப்படுவதால், விவசாயம் முழுவதுமாக பாதிக்கப்படுவதாகவும் அந்த பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தாங்கள் கடன் வாங்கி விவசாயத்தை செய்து வருகிறோம் ஆனால் இந்த கழிவுநீரால் நாங்கள் செய்த செலவு அனைத்தும் பாழாகி போகிறது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



 

அரிசி ஆலையில் நெல் அழிப்பதற்காக பயன்படுத்தப்படும் எரிபொருள் கழிவுகள் அனைத்தும் மதிய நேரங்களில் கரி துகள்களாக, பறக்கின்றன. ஒட்டகுடியில் இருந்து குளிக்கரை பகுதிவரை சாலையில் கரித்துகள்கள் பறப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர். மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், திருவாரூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மக்களை சமாதானப்படுத்த முற்படுகிறார்கள் தவிர, பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.



இதுகுறித்து அரவை மில் உரிமையாளர் குமாரிடம் கேட்டபொழுது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி கழிவு நீரை சுத்திகரித்து அதன்பின்தான் வெளியிடுகிறோம் எனவும் குடிநீர் கழிவுநீர் ஆவதற்கு அரவை மில்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.