தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி, நாகை அருகே கீழ்வேளூரில் வாகனத்தில் வரும் போது வாகன சோதனையில் போலீசாரால் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா பேட்டை தெரு, வடக்கு ஆத்தூர் பகுதியை சேர்ந்த கோபால் மகன் செந்தில் என்கிற செந்தில் குமார் இவர் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் இரண்டு கொலை வழக்குகள் உள்பட 10க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ரவுடி பட்டியலில் செந்தில் பெயர் உள்ளது. தூத்துக்குடி, தாளமுத்துநகர் காவல் சரகத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக போலீசார் தேடி வந்தனர். குற்றவாளி செந்திலின் செல்போன் நம்பரை கொண்டு போலீசார் ஆய்வு செய்தபோது, நாகை மாவட்டத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீசார் இது குறித்து நாகை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். செந்தில் காரில் கீழ்வேளூர் நோக்கி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
தகவலின் பேரில் கீழ்வேளுர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் வந்த செந்தில் என்பர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து. காவல்துறையினர் செந்திலை பிடித்து கீவளூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று மாவட்டத்தில் யாரேனும் முக்கிய புள்ளிகளை சம்பவம் செய்ய வந்தாரா? அல்லது தூத்துக்குடியில் செய்த சம்பவங்களுக்காக தப்பிக்க நினைத்து நாகையில் தலைமறைவாக இருந்துள்ளாரா? இவருக்கு அடைக்கலம் கொடுத்தது யார் என விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தலைஞாயிறு அருகே கரியாப்பட்டினம் பகுதியில் கடந்த 2 மாதமாக தங்கி இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து கீவளூர் காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விரைந்து கீவளூர் வந்த தூத்துக்குடி மாவட்ட ஆத்தூர் காவல்துறையினர் செந்திலை விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.