தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இட பிரச்சனையால் ஏற்பட்ட தகராறில் பா.ம.க., முன்னாள் நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் கொலையானவரின் உறவினர்கள் இரு இடங்களில் சாலைமறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம், மேலானமேட்டை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் திருஞானசம்பந்தம் (51). விவசாயி. பா.ம.க., முன்னாள் பேரூர் நகர தலைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் நிலத்தை சாகுபடி செய்து வந்தார்.
அந்த நிலத்திற்கான உரிய குத்தகையை, திருஞானசம்பந்தம் முறையாக வழங்கவில்லை எனக்கூறி, நிலத்தின் உரிமையாளர் தனது நிலத்தை சாகுபடி செய்ய அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். இதனால், ராஜேந்திரனுக்கும், திருஞானசம்பந்த்திற்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதங்கள் சில நேரங்களில் கைகலப்பாகவும் மாறியுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் திருஞானசம்பந்தத்தை, ராஜேந்திரன் மற்றும் அவரது தரப்பினர் தாக்கினர். இது குறித்து சோழபுரம் போலீசார், வழக்கு பதிவு செய்து, ராஜேந்திரன் உள்ளிட்டோரை கைது செய்தனர். பின்னர் இவர்கள், நிபந்தனை ஜாமீனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியில் வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை இப்பிரச்னை தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த திருஞானசம்பந்தத்தின் தலையில் ராஜேந்திரன் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் திருஞானசம்பந்தம் உயிரிழந்தார். இது குறித்து சோழபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய ராஜேந்திரனை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் திருஞானசம்பந்தத்தின் உறவினர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. அலட்சியமாக செயல்பட்டதால்தான் திருஞானசம்பந்தம் கொலை செய்யப்பட்டு விட்டார் என கூறி மருத்துவமனை முன்பும், சோழபுரம் கடைத்தெருவிலும், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.
நாட்டு வெடிகுண்டு வீசிய நபர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் மணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் தற்போது கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவருக்கும் திருபுவனத்தை சேர்ந்த குருமூர்த்தி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மணஞ்சேரியில் முருகனுக்கும், குருமூர்த்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அங்கிருந்து கலைந்து சென்ற பிறகு யாரோ நாட்டு வெடிகுண்டை மணஞ்சேரி வீரசோழன் ஆற்று தலைப்பு பகுதியில் வீசியதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் தொடர்புடையதாக சரண்ராஜ் என்பவரை திருவிடைமருதூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.