ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பதை முன்கூட்டியே தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் காமராஜ் வலியுறுத்தியுள்ளார்.

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு காய்கறி அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முன்களப் பணியாளர்களுக்கு மாவட்ட அதிமுக சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை ஒட்டி திருவாரூர் நகராட்சியில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை முன்னாள் அமைச்சர் காமராஜ் இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது...

 

‛‛கொரானா இரண்டாவது அலை தமிழகத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. கொரானா தொற்றை தடுக்கும் வகையில் அதிக கொரானா பரிசோதனைகள் செய்ய வேண்டும். அப்படி எடுத்தால் தான் தொற்றை குறைப்பதற்கு வழி வகுக்கும். எனவே தொற்று இருக்கிறதா என்பது குறித்த பரிசோதனைகள் அதிக அளவில் எடுக்க வேண்டும். அதேபோன்று தமிழக அரசு பொதுமக்களுக்கு கொரானா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களை வீட்டில் தனிமையில் இருந்து கொள்ளுங்கள் என மருத்துவர்கள் கூறுவது, பொதுமக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே கொரோனா கேர் சென்டர்களை அதிகப்படுத்தி அவர்களை அங்கேயே தங்க வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து தொற்று இல்லை என முடிவு வரும்வரை சிகிச்சை அளித்து அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

 

டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபடுவதற்கு மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தற்போது மேட்டூர் அணையில் 97 அடி தண்ணீர் உள்ளது. நமக்கு கர்நாடகாவிலிருந்து தர வேண்டிய தண்ணீரை தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும். மேட்டூர் அணை திறப்பதற்கு முன்னால் தண்ணீர் திறக்க போகிறோம் என்கிற அறிவிப்பினை முன்கூட்டியே தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் விவசாயிகள் அதற்கான பணிகளை தொடங்குவார்கள்.

 

புதிய அரசு தற்போதுதான் பொறுப்பேற்று இருக்கிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன. யாரையும் உடனடியாக குற்றம் சொல்வதற்கு இல்லை. இன்னும் பணிகளை கூடுதலாக செய்ய வேண்டும். மக்களை பாதுகாக்க வேண்டும். முதல் தொற்றில் அதிமுக அரசு மக்களை பாதுகாத்து இருக்கிறது. அதே போன்று புதிய அரசு உரிய வழிமுறைகளைப் பின்பற்றி மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்,’’ என்றார். 

 

சசிகலா ஆடியோ வெளியானது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு, ‛‛நீங்கள் எப்படி தொலைக்காட்சிகளில் பார்க்கிறீர்களோ அதே போன்று தான் நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதைப் பற்றி கருத்து கேட்க வேண்டுமென்றால் சசிகலாவிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும், ’’ என்றார். மேலும் பருப்பு டெண்டரை தமிழக அரசு ரத்து செய்தது பற்றி கேட்டதற்கு, ‛‛பருப்பு டெண்டரை ரத்து செய்தது அரசின் நடவடிக்கை. அரசின் நடவடிக்கைகளில் நாங்கள் தலையிட முடியாது,’’ என முன்னாள் அமைச்சரும் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான காமராஜ் தெரிவித்தார்