முன்னாள் கவுன்சிலருக்கு போட்டியிட திமுக சீட் தர மறுப்பு: குடும்பத்துடன் சுயேட்சையாக 3 வார்டுகளில் போட்டி
திமுகவில் உழைப்பவர்களுக்கு மறியாதை இல்லை. திமுக வேட்பாளரை மூன்று வார்டுகளிலும் தோஷ்கடித்து, நாங்கள் வெற்றி பெறுவோம்
திமுக வேட்பாளர்களை குடும்பத்துடன் தோற்கடிப்போம்
தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில், ஏற்கனவே திமுக சார்பில் வெற்றி பெற்று கவுன்சிலராக இருந்தவருக்கு, இம்முறை சீட் தர மறுக்கப்பட்டதால், மூன்று வார்டுகளில் குடும்பத்துடன் திமுகவுக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட நேற்று மனு தாக்கல் செய்தனர்.
தஞ்சாவூர் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (54), இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தஞ்சாவூர் நகராட்சியாக இருந்த போது, 44 ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலரானார். இம்முறை மாநகராட்சியாக தர உயர்த்தப்பட்ட நிலையில், 44 வது வார்டாக இருந்த பகுதி, தற்போது 32, 33, 34 என மூன்று வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செல்வகுமார் திமுக சார்பில், 33-வது வார்டில் போட்டியிட, திமுக மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களிடம் சீட் கேட்டார். ஆனால், திமுகவினர் அவருக்கு சீட் வழங்க மறுப்பு தெரிவித்துனர். இதையடுத்து, ஏற்கனவே 44 ஆவது வார்டில் இருந்து வெற்றி பெற்ற நிலையில், 32 ஆவது வார்டில் செல்வகுமாரும், 33 ஆவது வார்டில் அவரது மனைவி வனிதா (52), 34 வது வார்டில் அவரது மகன் சக்கரவர்த்தி (30) ஆகிய மூவரும் சுயேட்சையாக போட்டியிட மாநகராட்சி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து செல்வகுமார் கூறுகையில், தஞ்சை நகராட்சியாக இருந்த காலத்தில், கடந்த 1958 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 முறை, அப்போதையே 27 ஆவது வார்டில் கவுன்சிலராக வெற்றி பெற்றவர் எனது தந்தை சீனிவாசன். மறைந்த முதல்வர் கருணாநிதியிடம் நெருக்கமான நட்புக்கொண்டவர். 1962ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், தஞ்சாவூரில் அதிக வாக்குபெற்று கொடுத்தால், எனது தந்தைக்கு கருணாநிதி மோதிரம் அணிவித்தார். அதன்பிறகு தந்தையின் மறைவுக்கு பிறகு கடந்த 2000 ஆம் ஆண்டு திமுகவில் கவுன்சிலராக போட்டியிட நான் சீட் கேட்ட போது மறுத்து விட்டனர். அதன் பிறகு சுயட்சையாக தென்னைமரம் சின்னத்தில், போட்டியிட்டு 11 வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவிடம் தோற்றேன். ஆனால், என்னைவிட திமுக 18 வாக்கு வித்தியாச்சதில் தோற்றது.
இம்முறை சீட் கேட்டநிலையில் மறுக்கப்பட்டதால், சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்து வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுகவில் உழைப்பவர்களுக்கு மறியாதை இல்லை. பல ஆண்டுகாலமாக இருந்த எங்களை சீட் வழங்காமல், தற்போது திமுகவில் உறுப்பினராக வந்தவரக்கு சீட் வழங்கியுள்ளனர். திமுக வேட்பாளரை மூன்று வார்டுகளிலும் தோஷ்கடித்து, நாங்கள் வெற்றி பெறுவோம். அப்போது தெரியும் எங்களின் உழைப்பு. ஏற்கனவே நின்ற தென்னை மர சின்னத்தை கேட்டுள்ளேன் என்றார்.