தஞ்சை காவிரி சிறப்பங்காடி அருகில் உள்ள மாலை நேர அம்மா காய்கறி அங்காடி சுமார் 60 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. இங்கு சுமார் 50 க்கும் மேற்பட்ட மிகவும் ஏழ்மையில் உள்ளவர்கள் மாலை நேரத்தில் காய்கறிகளை விற்பனை செய்து வருவார்கள். இதனால் மாலை நேரத்தில் அனைத்து வகை காய்கறிகளும், கீரை வகைகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை முறையில் காய்கறிகளை விற்பனை செய்வதால், மாலை நேரத்தில் விற்பனை ஜரூராக நடைபெறும். இதற்காக கடைகளுக்கு கடந்த சில மாதங்கள் முன்பு வரை மாநகராட்சி நிர்வாகம்  குறிப்பிட்ட தொகை  வசூலிக்கப்பட்டு, அதற்கான ரசீதும் வழங்கப்பட்டது.




தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன் படி தஞ்சை மேலவீதி, வடக்கு வீதி, தெற்கு வீதிகள் உள்ள சாலைகள் அகற்றப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஈடுபட தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சாலை ஒரங்களில் உள்ள நீர் நிலைகள் மேல் உள்ள கட்டிடங்கள், கடைகள், வணிக வளாகங்களை இடித்து, மீட்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில், தஞ்சை பழைய பேருந்து நிலையம் பின்புறம்  காவேரி சிறப்பங்காடி அருகிலுள்ள அம்மா மாலை நேர காய்கறி அங்காடி கடைகளை தஞ்சை மாநகராட்சி அலுவலர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வந்து திடீரென கடையில் உள்ள பொருட்களை உடனடியாக எடுத்துச் செல்லுங்கள், நாங்கள் இடிக்க வந்துள்ளதாக கூறியதால்,  காய்கறி வியாபாரிகள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.




பின்னர், மேற்கு காவல் நிலைய போலீசார்,  பேச்சுவார்த்தை நடத்தி மாநகராட்சி ஆணையரிடம் அழைத்துச் சென்றார்.  வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்  மார்க்கெட் சங்க தலைவர் வெ.சேவையா தலைமையில்,  ஆணையர்  சரவணகுமாரிடம்,   இப்பகுதியில் திலகர் திடல் தரைக்கடை காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நாங்கள் அறுபது வருடகாலமாக இப்பகுதிகள் தரைக்கடை வியாபாரம் செய்து வருகிறோம். 2014 ஆம் ஆண்டு  முதல் ஏஐடியூசி மார்க்கெட் சங்கம் உருவாக்கி பல போராட்டங்கள் நடத்தியதால் அப்போதைய நகர மன்றத் தலைவர் கு.சுல்தான் அவர்களும் இடம் ஒதுக்கி கொடுத்து வியாபாரம் செய்ய அனுமதி அளித்துள்ளார். 




கடுமையான இயற்கை மழை ,வெயில் பாதிப்புகளில்  நாங்கள் வியாபாரம் செய்ய கஷ்டப்பட்டு வந்தோம். எங்களது சங்கம் மூலமாக மேற்கூரை, தரைத்தளம், மின் வசதி வேண்டி விண்ணப்பம் அளித்து, அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு தஞ்சை நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த அடிப்படையில் மேற்கூரையும், சிமென்ட் தரைத் தளமும் அமைத்துக் கொடுக்கப்பட்டது. நாங்கள் முறையாக மாநகராட்சிக்கு உரிய வாடகை செலுத்தி வருகிறோம். மாநகராட்சியால் கொரானா காலத்தில்  வசூல் செய்வதில்லை என முடிவெடுத்ததால் வாடகை வசூல் செய்ய யாரும் வரவில்லை.  இன்றைய தினம் மாநகராட்சிக்குரிய வாடகை தரவில்லை என்று கூறியும், இப்பகுதி கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது உடனடியாக உங்கள் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள் நாங்கள் இடிக்கப்போகிறோம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினார்கள். என்று தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறினார்கள். மாநகராட்சி ஆணையரும் இது குறித்து  ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.