தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த விழாவில் ரூ.9.31 லட்சம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்களை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.


ஐ.நா. வழிகாட்டுதல்படி 1992-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில், மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்வது, அவர்களைக் கண்ணியத்துடன் நடத்துவது மற்றும் அவர்களின் நல்வாழ்வு, உரிமைகள், அவர்களுக்கு உரிமை கொடுப்பது இந்த நாளின் நோக்கமாகும்.


மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் ரீதியாகவும், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியாகவும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சம உரிமையை வழங்குவதற்கு, நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதையும் அது அறிவுறுத்துகிறது.


சர்வதேச மாற்றுத்திறனாளர்கள் தினத்திற்கான இந்த ஆண்டு கருப்பொருள், நீடித்த வளர்ச்சி மற்றும் இலக்குகளை அடைய மாற்றுத்திறனாளர்களுக்கு, அவர்களுடன் இணைந்து அவர்களே செயலாற்றி, அதை அடைய வேண்டும் என்பதாகும். அந்த வகையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வுத் துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதல்வரின் மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் செயற்கை கை,கால் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9.31 லட்சம் மதிப்பிலான செயற்கை கை,கால் உபகரணங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:




தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாதாந்திர உதவித்தொகை மற்றும் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
 
சென்னைக்கு அடுத்தபடியாக தஞ்சாவூரில் சிறப்பாக இந்த நலஉதவி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 


முன்னதாக உடலியல் மருத்துவம் மற்றும் புணர்வு வாழ்வுத்துறை துறைத்தலைவர் மரு.ச.குமரவேல் வரவேற்றார். மரு.து.பாலமுரளி நன்றி கூறினார்.  பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் உலகமாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி நடந்த நாட்டுப்புறக் கலைஞர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை கலெக்டர் பார்வையிட்டார்.


விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதுதஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகம் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது. 


நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி நலஅலுவலர் சீனிவாசன், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவ பேராசிரியர்கள் ராமசாமி,  ஆறுமுகம், செல்வம், முகமது இத்ரிஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 


மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிநலனுக்காக தமிழகஅரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக சீடு என்ற தொண்டு நிறுவனம் மூலமாக கலைக்குழு மூலம் மாவட்டம் முழுவதும் கலைநிகழ்வுகள் மற்றும் தெருமுனை நாடகங்கள் நடக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.